நகைக்கடை நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி: 53 ஆயிரம் பேருக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் பணி தீவிரம்
பெங்களூருவில் நகைக்கடை நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி செய்த விவகாரத்தில் 53 ஆயிரம் பேருக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பெங்களூரு: பெங்களூருவில் நகைக்கடை நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம் மோசடி செய்த விவகாரத்தில் 53 ஆயிரம் பேருக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
பல கோடி ரூபாய் மோசடி
பெங்களூரு சிவாஜிநகரில் மன்சூர்கான் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை (ஐ.எம்.ஏ.) நிறுவனம் இருந்தது. இந்த நிறுவனத்தில் நகை சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்த ஆயிரக்கணக்கான மக்களிடம் பணத்தை பெற்று பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் மன்சூர்கான் மோசடி செய்திருந்தார். இதுதொடர்பாக கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். மன்சூர்கான், முன்னாள் மந்திரி ரோசன் பெய்க், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள்.
மேலும் மன்சூர்கான், ரோசன் பெய்க் உள்ளிட்ட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், சொத்துகள் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட நகைகள், சொத்துகளை விற்று கிடைக்கும் பணத்தை நகைக்கடை நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்களுக்கு திரும்ப கொடுப்பதற்காக அரசு சார்பில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
பணத்தை திரும்ப கொடுக்க...
இந்த நிலையில், அரசு சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அவர்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர். இதற்காக மன்சூர்கான் உள்ளிட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் மூலம் விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு கீழ் முதலீடு செய்து ஏமாந்த 5,900 பேருக்கு, அவர்கள் முதலீடு செய்த முழு தொகையையும் திரும்ப கொடுக்க அந்த குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
நகைகளை அடகு வைத்தவர்களுக்கு, அவா்களது நகைகளை திரும்ப கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதுதவிர ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.60 லட்சம் வரை முதலீடு செய்த 53 ஆயிரம் பேருக்கு, சொத்துகளை ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் பணத்தை குறிப்பிட்ட இடைவெளியில் வழங்கவும் அந்த குழுவினர் முடிவு செய்துள்ளனர். கூடிய விரைவில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கும் பணி தொடங்கும் என அதிகாரி அமலான் ஆதித்ய பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார்.