வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது; மேலும் 4 பேருக்கு வலைவீச்சு
சிக்பள்ளாப்பூரில் வாலிபர் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோலார் தங்கவயல்;
மது விருந்து
சிக்பள்ளாப்பூர் புறநகர் நரசிம்மா ஆஷ்ரயாகுடியிருப்பு பகுதியில் வசித்து வந்தவர் துர்கேஷ் (வயது 26). இவர் சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பெங்களூரு இணைப்பு சாலையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவரின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து அவர்கள் மதுகுடிக்க சென்றுள்ளனர். இதையடுத்து இரவு வெகுநேரம் ஆனதால் ஓட்டலை மூடுவதாக அதன் உரிமையாளர் அவர்களிடம் கூறியுள்ளார்.
இதனால் அவர்கள் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு அந்த பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்று அங்கு வைத்து மது குடித்துள்ளனர். அப்போது நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறில் அவர்களில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் துர்கேசை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் துர்கேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
6 பேர் கைது
இதுகுறித்து சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாகேஷ் உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில், துர்கேஷ் கொலை வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் குமார் ரெட்டி, சந்தோஷ், வெங்கடேஷ், மஞ்சுநாத், சலபதி, வெங்கடப்பா என்பது தெரியவந்தது.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், குமார் ரெட்டி சமூக சேவகர் பெயரில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு துர்கேஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், குமார் ரெட்டி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து துர்கேசை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.