வாகன திருட்டு வழக்கில் 6 பேர் கைது; ரூ.3 கோடி மதிப்பிலான 8 சொகுசு கார்கள் பறிமுதல்


வாகன திருட்டு வழக்கில் 6 பேர் கைது; ரூ.3 கோடி மதிப்பிலான 8 சொகுசு கார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 10 April 2023 12:15 AM IST (Updated: 10 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் வாகன திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 8 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

போலி நம்பர் பிளேட் கார்

பெங்களூரு ஐகிரவுண்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குயின்ஸ் ரோட்டில் எம்.எல்.சி. போஜேகவுடாவின் கார் விற்பனைக்காக நிறுத்தப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது ஆதரவாளர் மாதேஷ், போஜேகவுடாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, தன்னுடைய கார் வீட்டில் நிற்பதாக கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த மாதேஷ், போஜேகவுடா காரின் போலி நம்பர் பிளேட்டுடன் மற்றொரு கார் விற்பனைக்கு நிறுத்தப்பட்டு இருப்பதாக கூறி ஐகிரவுண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து, போஜேகவுடா காருக்கான போலி நம்பர் பிளேட்டுடன் கூடிய காரை விற்க முயன்ற நபர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், ஐகிரவுண்டு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் வாகன திருட்டில் ஈடுபட்டு வந்த 6 பேரை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பெயர் நசீப் (வயது 38), மஞ்சுநாத் (45), சாபாஜ்கான் (31), சையத் ரியாஜ் (34), இம்ரான் (34), நயாஜ் கான் (32) என்று தெரியவந்தது.

ரூ.3 கோடி மதிப்பு

இவர்கள் 6 பேரும் கார் திருடர்கள் ஆவார்கள். வெளிமாநிலங்களில் கார்களை திருடுவார்கள். பின்னர் அநத கார்களை பெங்களூரு உள்ளிட்ட நகரங்களுக்கு கொண்டு சென்று, போலி நம்பர் பிளேட் மற்றும் ஆவணங்களை தயாரித்து குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை தொழிலாக வைத்திருந்தனர். பெரும்பாலும் சொகுசு கார்களை திருடுவதை தான் 6 பேரும் வாடிக்கையாக வைத்திருந்தனர்.

எளிதில் பணம் சம்பாதிக்கவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் இவ்வாறு கார்களை திருடி விற்பனை செய்துள்ளனர். அதுபோல், தான் திருடிய காருக்கு, எம்.எல்.சி.யான போஜேகவுடா காரின் நம்பர் பிளேட்டை ஒட்டி விற்க முயன்றது தெரியவந்தது. அவர்கள் 6 பேரிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 8 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 6 பேர் மீதும் ஐகிரவுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story