பா.ஜனதா ஆட்சியில் 68½ லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டதா?; சித்தராமையா கண்டனம்


பா.ஜனதா ஆட்சியில் 68½ லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டதா?; சித்தராமையா கண்டனம்
x

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் 68½ லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள கர்நாடக அரசுக்கு சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலையின்மை

இந்த பா.ஜனதா அரசுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. மக்களின் வரிப்பயணத்தை பயன்படுத்தி விளம்பரங்கள் மூலம் பொய்யான தகவல்களை வெளியிடுகிறார்கள். விளம்பரங்கள் கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. நான் உண்மை தகவல்களை மட்டும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். தற்போதைய பா.ஜனதா ஆட்சியில் 68½ லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த அரசு கூறியுள்ளது. இது தவறான தகவல். இதை கண்டிக்கிறேன்.

அப்படி என்றால் மாநிலத்தில் வேலையின்மைே குறைந்திருக்க வேண்டும் அல்லவா?. வேலையின்மை குறித்து சில நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக விவரங்களை வழங்கியுள்ளன. ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்போது, கர்நாடகத்தில் வேலையின்மை விவரங்களை பார்க்கும்போது பயமாக உள்ளது. கர்நாடகத்தில் மொத்த மக்கள்தொகையில் உழைக்க விரும்புகிறவர்களின் எண்ணிக்கை 2.49 கோடி ஆகும்.

உண்மை தகவல்கள்

இவர்களில் 2.10 கோடி பேர் ஏதாவது ஒரு வேலையை செய்கிறார்கள். 30 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர். கர்நாடகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் வரை வேலையின்மை 11.73 சதவீதமாக உள்ளது. இது நகரங்களில் 15.12 சதவீதமாக இருக்கிறது. பெண்களிடையே வேலையின்மை விகிதம் 58.55 ஆக அதிகரித்துள்ளது. நான் முதல்-மந்திரியாக இருந்தபோது, இது 16.46 ஆக இருந்தது. வேலையின்மை விஷயத்தில் இந்த உண்மை தகவல்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story