ஆசிரியை அடித்ததால் 6-ம் வகுப்பு மாணவி சாவு?


ஆசிரியை அடித்ததால் 6-ம் வகுப்பு மாணவி சாவு?
x

பெங்களூருவில் தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஆசிரியை அடித்ததால் மாணவி உயிரிழந்தாளா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு-

மாணவர்களை அடித்த ஆசிரியை

பெங்களூரு கங்கமனகுடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ராமசந்திரபுராவில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மகள் நிஷிதா (வயது 11). இவள் தனியார் பள்ளி ஒன்றில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் நேற்று முன்தினம் நிஷிதாவின் வகுப்பில் படித்து வந்த மாணவர்களை சேட்டை செய்ததாக கூறி ஆசிரியை ஒருவர் அடித்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது நிஷிதாவையும், ஆசிரியை அடித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மதியம் 1.45 மணியளவில் நிஷிதாவின் பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பள்ளி நிர்வாகம், நிஷிதா வகுப்பறையில் மயங்கி விழுந்து விட்டதாகவும், ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று இருப்பதாகவும் கூறி உள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர்.

மாணவி சாவு

அப்போது மயங்கிய நிலையில் இருந்த நிஷிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், நிஷிதாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த நிலையில் ஆசிரியை அடித்ததால் தான் நிஷிதா உயிரிழந்து விட்டதாக பெற்றோரும், உறவினர்களும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளனர்.

பாட்டி குற்றச்சாட்டு

இதுகுறித்து நிஷிதாவின் பாட்டி நிருபர்களிடம் கூறியதாவது:- மதியம் 1.30 மணிக்கு தான் நிஷிதாவின் தம்பியை பள்ளிக்கு சென்று வீட்டுக்கு அழைத்து வந்தேன்.அப்போது நிஷிதா நன்றாக தான் இருந்தாள். பின்னர் 1.45 மணிக்கு நிஷிதா மயங்கி விழுந்து விட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் கூறினர். கடந்த வாரம் நிஷிதாவின் நெற்றியில் ஒரு காயம் இருந்தது.

இதுகுறித்து நிஷிதாவிடம் கேட்ட போது ஆசிரியை ஒருவர் டஸ்டரை தூக்கி நெற்றியில் வீசியதாக கூறினாள். தற்போது அவள் உயிரிழந்து விட்டாள். ஆசிரியை அடித்ததால் தான் நிஷிதா உயிரிழந்து விட்டாள்.தற்போது அந்த பள்ளி நிர்வாகத்தினர் எங்களுக்கு ரூ.4 லட்சம் தருவதாக கூறுகின்றனர். எங்களுக்கு பணம் வேண்டாம். நிஷிதாவின் உயிர் தான் வேண்டும். இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

போலீஸ் விசாரணை

நிஷிதா உயிரிழந்த சம்பவம் குறித்து அவளது பெற்றோர் கங்கமனகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் ஆசிரியை அடித்ததால் நிஷிதா உயிரிழந்தாளா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story