எதிர்கட்சியினர் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் 7 மசோதாக்கள் தாக்கல்


எதிர்கட்சியினர் அமளிக்கு இடையே நாடாளுமன்றத்தில் 7 மசோதாக்கள் தாக்கல்
x

வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சிகள் தினந்தோறும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த கூட்டத்தொடரில் 21 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

எனவே, அமளிக்கிடையே மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய தொடங்கியது. நேற்று மக்களவையில் அமளி நடந்தபோதிலும், பிறப்பு, இறப்பு பதிவு திருத்த மசோதாவை தாக்கல் செய்யுமாறு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராயை சபாநாயகர் ஓம்பிர்லா கேட்டுக்கொண்டார்.

அதற்கு காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி எதிர்ப்பு தெரிவித்தார். மக்களவைக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்று அவர் கூறினார். இருப்பினும், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தொடர்ந்து, மேலும் 5 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில், ஜம்மு-காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவும் ஒன்றாகும். அதை மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், குரல் வாக்கெடுப்பு மூலம் தாக்கல் செய்தார். எந்த எதிர்க்கட்சி உறுப்பினரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு திருத்த மசோதாவை நித்யானந்த் ராய், குரல் வாக்கெடுப்பை தொடர்ந்து தாக்கல் செய்தார். அதற்கு தேசிய மாநாட்டு கட்சி எம்.பி. ஹஸ்னைன் மசூடி எதிர்ப்பு தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட்டின் ஆய்வில் இருப்பதால், இதுதொடர்பான மசோதாவை தாக்கல் செய்வது சட்டவிதிமீறல் என்று அவர் கூறினார்.

மத்திய மந்திரி வீரேந்திர குமார், ஜம்மு-காஷ்மீர் எஸ்.சி. பட்டியல் திருத்த மசோதாவையும், மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா, ஜம்மு-காஷ்மீர் பழங்குடியினர் பட்டியல் திருத்த மசோதாவையும் தாக்கல் செய்தனர்.

மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். அதற்கு புரட்சிகர சோஷலிஸ்டு கட்சி உறுப்பினர் என்.கே.பிரேம சந்திரன் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த மசோதா, பொதுத்துறை நிறுவனங்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டுமே பலன் அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மிகவும் ஆழத்தில் கிடைக்கும் தங்கம், வெள்ளி, வைரம், துத்தநாகம். செம்பு, காரீயம், பிளாட்டினம் போன்ற கனிமங்களை வெட்டி எடுப்பதை தனியாருக்கு திறந்துவிட இந்த மசோதா வழிவகுக்கிறது. அதற்காக தனியாருக்கு உரிமம் வழங்கப்படும். மேலும், சுரங்க குத்தகையை தனியாருக்கு ஏலம்விட மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

வன பாதுகாப்பு சட்ட திருத்த மசோதாவுக்கு வன ஆர்வலர்களும், சூழலியல் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நேற்று அம்மசோதா மக்களவையில் நிறைவேறியது. இந்த மசோதா, நாட்டின் எல்லைகள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் இருந்து 100 கி.மீ. தொலைவுக்குள் உள்ள நிலங்களை வன பாதுகாப்பு சட்டங்களின் வரம்பில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்கிறது.

அந்த நிலங்கள், தேசிய முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த கட்டமைப்புகளை அமைக்க பயன்படுத்தப்படும். ரெயில் பாதை, குடியிருப்பு மற்றும் ரெயில் நிலையத்துக்கு செல்லும் பொது சாலை ஆகியவற்றை ஒட்டிய வனப்பகுதி நிலங்கள், 'வனம்' என்ற வகைப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படும். குறுகிய விவாதத்துக்கு பிறகு, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

அதுபோல், மாநிலங்களவையில், இமாசலபிரதேச மாநிலம் சிர்மோர் மாவட்டம் டிரான்ஸ் கிரி பகுதியை சேர்ந்த ஹட்டீ என்ற சாதியை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான மசோதாவை மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை மந்திரி அர்ஜுன் முண்டா, அமளிக்கிடையே தாக்கல் செய்தார். இம்மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது, ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம், மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


Next Story