வனத்துறையினர் மீது கல்வீசி தாக்கிய 7 பேர் கைது


வனத்துறையினர் மீது கல்வீசி தாக்கிய 7 பேர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2023 12:15 AM IST (Updated: 26 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காட்டு யானையை பிடித்த பின்னரும் வனத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மங்களூரு:-

காட்டு யானை பிடிபட்டது

தட்சிண கன்னடா மாவட்டம் கடபா தாலுகாவில் கர்மனே பகுதியில் கடந்த 20-ந்தேதி காட்டு யானை தாக்கி ரஞ்சிதா (வயது 21) மற்றும் ரமேஷ் ராய் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். அந்தப்பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகம் இருப்பதாகவும், அதனை பிடிக்க வேண்டும் என்றும் அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் 2 பேரை கொன்ற யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கும்கி யானைகள் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு யானையை தீவிரமாக தேடினர். 4 நாட்கள் தேடுதல் வேட்டைக்கு பிறகு கடந்த 23-ந்தேதி முஜூரு காப்புகாடு பகுதியில் வைத்து காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

7 பேர் கைது

இந்த நிலையில் 2 பேரை கொன்ற காட்டு யானையை பிடித்த பிறகும், அந்தப்பகுதி மக்கள் மற்ற காட்டு யானைகளையும் பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் திடீரென்று அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் வனத்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். வனத்துறைக்கு சொந்தமான ஒரு ஜீப்பும், ஒரு காரும், 2 போலீஸ் வாகனங்களும் சேதமடைந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பாக வனத்துறையினர், கடபா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வனத்துறையினரை தாக்கியதாக கர்மனே கிராமத்தை சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story