ரவுடியை கொல்ல முயன்ற 7 பேர் சிக்கினர்
மங்களூரு அருகே ரவுடியை கொல்ல முயன்ற 7 பேர் சிக்கினர்.
மங்களூரு;
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே குத்ரோலியில் வசித்து வருபவர் ஆரிப். மீனவரான இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜ்ஜினடுக்கா பகுதியில் வைத்து 7 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்ய முயன்றனர்.
ஆனால் அவர்களிடம் இருந்து ஆரிப் தப்பினார். தற்போது அவர் காயங்களுடன் கங்கனாடி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி மங்களூரு பந்தர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஆரிப் ரவுடி என்பதும், அவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 11 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் ஆரிப் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் ஆரிப்பை மர்ம நபர்கள் கொலை செய்ய முயன்றது போலீசாருக்கு தெரியவந்தது.
இந்த நிலையில் இக்கொலை முயற்சி சம்பந்தமாக நவுபல், தலாத், அஷ்பக், நிசாக், ரிபாத் அலி, ரகீம், ஆர்ச்சித் ஆகிய 7 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். கைதான 7 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.