தறிகெட்டு ஓடி பள்ளத்தில் ஜீப் பாய்ந்தது; 7 தொழிலாளர்கள் பலி
பெலகாவி அருகே தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் ஜீப் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 கட்டிட தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெலகாவி: பெலகாவி அருகே தறிகெட்டு ஓடி சாலையோர பள்ளத்தில் ஜீப் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 7 கட்டிட தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது. அவர்களது குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.7 லட்சம் நிவாரண நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்தது
கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) டவுன் அருகே கணபரகி கிராம பகுதியில் நேற்று அதிகாலையில் 3 ஜீப்புகள் சென்று கொண்டிருந்தன.
அவற்றில் கட்டிட தொழிலாளர்கள் சென்று கொண்டிருந்தனர். அதில் ஒரு ஜீப், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக தறிகெட்டு ஓடியது. பின்னர் சாலையோர தடுப்பில் மோதி, உடைத்து கொண்டு அருகில் இருந்த பள்ளத்தில் பாய்ந்தது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. மற்ற 2 ஜீப்புகளில் வந்தவர்கள் விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜீப் கவிழ்ந்ததில், அதில் பயணம் செய்த 7 பேர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
தீவிர சிகிச்சை
படுகாயமடைந்தவர்களை மற்ற 2 ஜீப்புகளில் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாரிஹாலா போலீசார் வந்தனர். அவர்கள் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அக்காடங்கியாரா கிராமத்தை சேர்ந்த அடிவேப்பா சிளபன்வி(வயது 27), பசவராஜ் தாலவி(30), பசவராஜா ஹனமனா(51), ஆகாஸ்தங்கேரகா, பகிரப்பா ஹரிஜன்(55), மல்லப்பா உள்பட 7 பேர் என்பது தெரியவந்தது.
மேம்பால பணிகள்
பெலகாவியில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணிக்காக 40-க்கும் மேற்பட்ட கட்டி தொழிலாளர்கள் 3 ஜீப்புகளில் சென்றதும், அப்போது விபத்தில் சிக்கியதும் தெரியவந்தது. மேலும், டிரைவரின் அலட்சியம் மற்றும் அதிவேகமாக ஜீப்பை ஓட்டியதும் விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. முன்னதாக விபத்து நடைபெற்ற இடத்திற்கு நேரில் சென்று பெலகாவி போலீஸ் கமிஷனர் போரலிங்கையா ஆய்வு நடத்தினார்.
இதற்கிடையே விபத்தில் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் வாலிபரின் ஒருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாரிஹாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வருத்தம் அடைந்தேன்
இதற்கிடையே இந்த விபத்து குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெலகாவி அருகே நடைபெற்ற சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்த தகவல் கேட்டு வருத்தம் அடைந்தேன். அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
காயம் அடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பெலகாவி மாவட்ட நிர்வாகம் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். ஆகமொத்தம் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
நிவாரண நிதி
இறந்தவர்களில் 5 பேர் தொழிலாளர்கள் ஆவர். அதனால் அவர்களின் குடும்பத்தினருக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இதன்மூலம் அந்த 5 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கும் மொத்தம் ரூ.12 லட்சம் நிவாரண நிதி கிடைக்கும். பெலகாவியில் கருவில் சிசுக்கள் கொல்லப்பட்டது குறித்த விஷயத்தை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. அந்த ஆஸ்பத்திரி குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
அந்த ஆஸ்பத்திரி மீது கலெக்டர் நடவடிக்கை எடுப்பார். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.