பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 72 பேர் கைது; ரூ.3.16 கோடி நகைகள், வாகனங்கள் மீட்பு


பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் 72 பேர் கைது;  ரூ.3.16 கோடி நகைகள், வாகனங்கள் மீட்பு
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் திருட்டு, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.3.16 கோடி மதிப்பிலான நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது.

பெங்களூரு:

பிரதாப் ரெட்டி பார்வையிட்டார்

பெங்களூரு மேற்கு மண்டல போலீசார், நகரில் திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட கும்பலை கைது செய்து நகைகள், வாகனங்களை மீட்டு இருந்தார்கள். அந்த நகைகள், வாகனங்கள் மைசூரு ரோட்டில் உள்ள நகர ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தது.

அவற்றை நேற்று காலையில் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, கூடுதல் போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் ஆகியோர் பார்வையிட்டார்கள். பின்னர் போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது;-

ரூ.3.16 கோடி மதிப்பு

பெங்களூரு மேற்கு மண்டலத்தில் உள்ள பசவேசுவராநகர், கலாசி பாளையம், விஜயநகர், பேடராயனபுரா, உப்பார்பேட்டை உள்ளிட்ட போலீசார், நகரில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 72 பேர் கும்பலை கைது செய்துள்ளனர். அந்த கும்பலினர் கொடுத்த தகவல்களின் பேரில் 2 கிலோ 745 கிராம் தங்க நகைகள், 4 கிலோ 859 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.32 லட்சம் ரொக்கம், 86 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோக்கள், 6 நான்கு சக்கர வாகனங்கள், எலெக்ட்ரானிக் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இதுதவிர 46 கிலோ கஞ்சா, 62 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் 26 கிராம் பிரவுன் சுகர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அவற்றின் மதிப்பு ரூ.3 கோடியே 16 லட்சம் ஆகும். குற்றவாளிகளை திறமையாக செயல்பட்டு பிடித்த போலீசாருக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story