அரசு பள்ளி ஆசிரியர்கள் 8 பேர் பணி இடைநீக்கம்
சித்ரதுர்காவில், தனியாக தொழில் தொடங்கி பணம் சம்பாதித்த அரசு பள்ளி ஆசிரியர்கள் 8 பேரை பணி இடைநீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு:-
அரசு பள்ளி ஆசிரியர்கள்
சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள், தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதித்து வருவதாகவும், அதனால் அவர்கள் ஆசிரியர் பணியில் கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான புகார்கள் மாவட்ட கல்வித்துறை அதிகாரி ரவிசங்கருக்கும் சென்றது.
அதன்பேரில் அவர் இதுபற்றி விசாரணை நடத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதையடுத்து அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் 16 ஆசிரியர்கள் இதுபோல் தனிப்பட்ட முறையில் பணம் சம்பாதித்து வந்தது தெரியவந்தது.
தனியாக தொழில் தொடங்கினர்
அதாவது அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ரவிக்குமார், சீனிவாஸ், சித்தம்மா, இந்திராணி, மஞ்சுளா உள்பட 16 பேர் இதுபோல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 16 பேரையும், கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதில் ஆசிரியர்கள் ரவிக்குமார், சீனிவாஸ், சித்தம்மா, இந்திராணி, மஞ்சுளா உள்பட 8 பேர் நேரடியாக தனிப்பட்ட முறையில் தொழில் தொடங்கிய முதலீடு செய்து ஒன்றுக்கு 3 மடங்கு பணம் சம்பாதித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரவிக்குமார் உள்பட 8 ஆசிரியர்களையும் பணி இடைநீக்கம் செய்ய கல்வித்துறை அதிகாரி ரவிசங்கரிடம், விசாரணை அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
பணி இடைநீக்கம்
அதன்பேரில் அவர்கள் 8 பேரையும் பணி இடைநீக்கம் செய்து அதிகாரி ரவிசங்கர் உத்தரவிட்டார். தொடர்ந்து இதுபோல் யாரேனும் தனிப்பட்ட முறையில் தொழில் தொடங்கி பணம் சம்பாதித்தால் அந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரி ரவிசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.