மினிலாரியில் கடத்திய 8 டன் ரேஷன் அரிசி சிக்கியது
ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்காமல் மினிலாரியில் கடத்திய 8 டன் ரேஷன் அரிசி சிக்கியது. இதுதொடர்பாக டிரைவர், கிளினீர் கைது செய்யப்பட்டனர்.
சிக்கமகளூரு:-
ரேஷன் அரிசி கடத்தல்
தாவணகெரே மாவட்டம் மாலேபென்னூரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் மற்றும் தாசில்தார் ஆகியோர் நேற்று முன்தினம் மாலேபென்னூரை அடுத்த கோபனஹள்ளி கிராமத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த மினி லாரி ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதை பார்த்த மினி லாரி டிரைவர் மற்றும் கிளீனர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பியோட முயற்சித்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் லாரியில் சோதனை செய்தனர்.
8 டன் ரேஷன் அரிசி சிக்கியது
அப்போது அதில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான தலா 50 கிலோ எடையிலான 165 மூட்டை அரிசி இருந்தது.லாரியில் இருந்த டிரைவர், கிளீனரை போலீசர் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், சிக்கமகளூரு மாவட்ட உணவு வழங்கல் குடோனில் இருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை மினி லாரியில் ஏற்றி ரேஷன் கடைகளுக்கு வினியோகிக்காமல் ராமநகர் மாவட்டத்திற்கு கடத்தி சென்று விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து 8 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 பேர் கைது
மேலும் ரேஷன் அரிசியை கடத்தியதாக டிரைவர், கிளீனர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவை சேர்ந்த டிரைவர் பரத் (32) என்பதும், மாலேபென்னூர் பேட்டை தெருவை சேர்ந்த கிளீனர் ஜாகீர் (வயது 28) என்பதும் தெரியவந்தது. அவர்கள் 2 பேர் மீதும் தாவணகெரே புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.