இந்தியாவில் 88 சதவீதம் பேருக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை! - மத்திய சுகாதாரத்துறை மந்திரி தகவல்
இன்று காலை 7 மணி நிலவரப்படி 193.13 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
இந்தியாவில் இதுவரை 88 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இது குறித்து மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியிருப்பதாவது, "18 வயது நிரம்பியவர்களில் 88 சதவீதத்துக்கும் அதிகமானோர் இப்போது கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர். வாழ்த்துகள் இந்தியா!
தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா குறித்த பொருத்தமான நடத்தையைப் பின்பற்றுங்கள்" என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட இன்றைய அறிக்கையின்படி, இதுவரை இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கையானது, இன்று காலை 7 மணி நிலவரப்படி 193.13 கோடிக்கும் அதிகமான (1,93,13,41,918) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 18-59 வயது உடையவர்களுக்கு கொரோனா முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி ஏப்ரல் 10, 2022 அன்று தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.