சிக்கமகளூருவில் அடுத்த மாதம் 8-ந்தேதி தத்தா ஜெயந்தி விழா
சிக்கமகளூருவில் அடுத்த மாதம் 8-ந்தேதி தத்தா ஜெயந்தி விழா நடக்க உள்ளது. இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ரமேஷ் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சிக்கமகளூரு:-
தத்தா ஜெயந்தி
சிக்கமகளூரு சந்திரதிருகோண மலையில் பாபாபுடன்கிரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தத்தாபீடம் உள்ளது. இ்ங்கு இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் வந்து வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்துக்கள் இந்த கோவிலை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டனர். இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, பாபாபுடன்கிரி கோவிலை மாநில அரசே நிர்வகிக்கும்படி உத்தரவிட்டது. அதன்படி மாநில அரசு 8 பேர் கொண்ட நிர்வாக குழுவினரை நியமித்துள்ளனர். இவர்கள் நிர்வாகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பாபாபுடன்கிரி மலையில் வருகிற 8-ந் தேதி தத்தா ஜெயந்தி விழா நடக்கிறது. இந்த தத்தா ஜெயந்தி விழாவையொட்டி ஏராளமான இந்து பக்தர்கள் மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்ய இருக்கின்றனர். இந்த நாட்களில் அங்கு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வந்துள்ளது. இந்த நிலையில் பாபாபுடன்கிரி மலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் ரமேஷ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
35 ஆயிரம் பேர் பங்கேற்பு
இந்த கூட்டம் முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சிக்கமகளூரு பாபாபுடன்கிரி மலையில் வருகிற 8-ந் தேதி தத்தா ஜெயந்திவிழா நடக்கிறது. இதையொட்டி வருகிற 6-ந் தேதி அனுசியா ஜெயந்தி விழா நடக்கிறது. 7-ந் தேதி சிக்கமகளூருவில் பக்தர்கள் பிரமாண்ட ஊர்வலம் நடத்த இருக்கின்றனர். 8-ந் தேதி தத்தா பீடத்திற்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் கலந்து கொள்வதற்காக ஏராளமான இந்து அமைப்பினர் மாலை அணிவிந்துள்ளனர். சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி முதல் நாளான 6-ந் தேதி மாலை அணிந்த பக்தர்கள் அனைவரும் போல ராமேஸ்வரா கோவிலில் இருந்து காமதேனு கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்கின்றனர். பின்னர் 7-ந் தேதி 10 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் பிரமாண்ட ஊர்வலம் நடக்கிறது. இறுதி நாளான 8-ந் தேதி தத்தா பீடத்தில் பாத தரிசன பூஜை நடக்கிறது. இதில் 35 ஆயிரம் பேர் கலந்து கொள்கின்றனர்.
கடும் நடவடிக்கை
இந்த நேரங்களில் தேவையில்லாத கோஷங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் செயல்களில் ஈடுபட கூடாது. தத்தா பீடத்தை தொடர்ந்து வேறு எந்த பூஜையும் நடத்த கூடாது. விதிமுறையை மீறி யாரேனும் அசம்பாவிதங்களில் ஈடுபட்டால், தத்தா பூஜைக்கு அனுமதி கோரிய நிர்வாக குழுவினர் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த இடங்களிலும் அசம்பாவிதங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போலீசார் குவிக்கப்படுவார்கள். யார் விதிமுறையை மீறினாலும், சட்டவிரோத செயல்களில் அவர்கள் மீது மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.