கர்நாடகத்தில் மழைக்கு 9 பேர் பலி


கர்நாடகத்தில் மழைக்கு 9 பேர் பலி
x

கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட ஏராளமான மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதில் 9 பேர் பலியானார்கள். பலத்த மழையால் சாம்ராஜ்நகரில் 3 ஆயிரம் வாழைகள் அடியோடு சாய்ந்தன.

பெங்களூரு:-

கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.

பெங்களூருவை புரட்டி போட்டது வெயில் கொடுமை தாங்க முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கினார்கள். குறிப்பாக கலபுரகி, கொப்பல், யாதகிரி, ராய்ச்சூர், பெங்களூரு புறநகர், சித்ரதுர்கா, தாவணகெரே, பாகல்கோட்டை மாவட்டங்களில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் அடித்தது. வெப்பத்தின் தாக்கம் காரணமாக ராய்ச்சூர், கொப்பல் உள்ளிட்ட மாவட்டங்களில் 24 பச்சிளம் குழந்தைகள் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அவ்வப்போது ஆங்காங்கே மழை பெய்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி-மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. பெங்களூருவில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் பெய்த ஆலங்கட்டி மழை ஒட்டு மொத்த நகரையே புரட்டி போட்டது. சூறைக்காற்று

வீசியதால் மரங்களும், மரக்கிளைகளும் முறிந்து விழுந்தன. மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன.

கப்பன் பார்க்கில் 100 மரங்கள்

பெங்களூரு கப்பன் பார்க்கில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்திருந்தது. அந்த மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் நேற்று முழு வீச்சில் நடைபெற்றது. இதுபோல், பெங்களூருவில் பல இடங்களில் மரங்கள் முறிந்து கார் உள்ளிட்ட வாகனங்கள் மீது விழுந்ததால், அந்த வாகனங்கள் சேதம் அடைந்திருந்தது. குறிப்பாக மகாலட்சுமி லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், அங்கு வசித்தவர்கள் நேற்று முன்தினம் இரவு தூங்க முடியாமல் விடிய, விடிய பரிதவித்தார்கள். மல்லேசுவரத்தில் உள்ள தனியார் நகைக்கடையில் வெள்ளம் புகுந்ததால் அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் சேதமடைந்தன. அதில் பல நகைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நகைக்கடையை பார்த்து உரிமையாளரும், ஊழியர்களும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

தாழ்வான பகுதிகளில் மழைநீர் 6 அடி உயரத்திற்கு தேங்கி நின்றதால், தண்ணீரில் மூழ்கி வாகனங்கள் சேதம் அடைந்தன. நேற்றுகாலையில் அந்த வாகனங்களை ஸ்டார்ட் செய்ய முடியாமல் மக்கள் திணறியதையும், பழுது பார்க்கும் கடைகளுக்கு தள்ளிக் கொண்டே சென்றதையும் பார்க்க முடிந்தது. பெங்களூருவில் மழையால் பெருமளவு பாதிக்கப்பட்டு இருந்ததால், முறிந்து விழுந்த மரங்களை அகற்றும் பணிகளில் நேற்று மாநகராட்சி தொழிலாளர்கள் ஈடுபட்டார்கள்.

டி.கே.சிவக்குமார் பார்வையிட்டார்

சுரங்க பாதைகள், சுரங்க சாலைகள், மேம்பாலங்களுக்கு அடியில் தேங்கி நின்ற தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. மழை பாதித்த பகுதிகளை மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று காலையில் ஆய்வு செய்தார். குறிப்பாக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மழை பாதித்த பகுதிகளுக்கு நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையிலும் சென்று பார்வையிட்டு, அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டு அறிந்து கொண்டார்.

இந்த நிலையில், பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் மின்னல் தாக்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக சிறுவன் உள்பட 9 பேர் பலியான பரிதாபம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கால்வாயில் அடித்து செல்லப்பட்டார்

பெங்களூரு விதானசவுதா அருகே கே.ஆர்.சர்க்கிளில் நேற்று முன்தினம் மாலையில் சுரங்க சாலையில் குளம் போல் தேங்கி நின்ற தண்ணீரில் கார் மூழ்கியதால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் என்ஜினீயர் பானு ரேகா பலியானார். அவரது குடும்பத்தினர் 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டார்கள். இதுபோல், கே.பி.அக்ரஹாரா அருகே சாக்கடை கால்வாயில் அடித்து செல்லப்பட்டு இருந்த லோகேஷ் உயிர் இழந்தார். அவரது உடல் நேற்று மீட்கப்பட்டது.

இந்த சம்பவங்கள் தொடர்பாக அல்சூர்கேட் மற்றும் கே.பி.அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொப்பல் மாவட்டம் சிவபுரா கிராமத்தில் வசித்து வந்தவன் ஸ்ரீகாந்த் தொட்டனகவுடா மேடி(வயது 16). இந்த சிறுவன் நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்று விளையாடினான். அப்போது ஸ்ரீகாந்தை மின்னல் தாக்கியது. உயிருக்கு போராடிய அவன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டான்.

கிராம பஞ்சாயத்து உறுப்பினர்

இதுபோல், விஜயநகர் மாவட்டம் கூட்லகி தாலுகா டி.சித்தாபுரா கிராமத்தை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன்(38). இவர், கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஆவார். நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்யும் போது வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்தில் அமர்ந்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் மல்லிகார்ஜுனை மின்னல் தாக்கியதில் அவர் பலியானார். சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே டவுனில் சூறைக்காற்றுடன் பெய்த மழையின் போது ஸ்கூட்டரில் சென்ற வேணுகோபால் (45) என்பவர் மீது ஒருமரம் முறிந்து விழுந்ததில் படுகாயம் அடைந்து இறந்து விட்டார்.

மைசூரு மாவட்டத்தில் பெய்த கனமழைக்கு பிரியப்பட்டணா தாலுகா பெட்டதபுரா அருகே ஆவர்தி கிராமத்தை சேர்ந்த விவசாயியான லோகேஷ்(55), உன்சூர் தாலுகா மண்டிகொப்பலு கிராமத்தை சேர்ந்த விவசாயியான ஹரீஷ் ஆகிய 2 பேரும் மின்னல் தாக்கியும், பெட்டதபுரா அருகே மின்சாரம் தாக்கி சுவாமி(18) என்ற வாலிபரும் பலியானார்கள். இதுமட்டுமின்றி ஹரீஷ்(42), சஞ்சய்(19) ஆகிய 2 பேரும் மின்சாரம் தாக்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

9 பேர் சாவு

ராய்ச்சூர் மாவட்டம் சிரவாடா தாலுகா பல்லடகி கிராமத்தை சேர்ந்தவர் பீரப்பா. நேற்று முன்தினம் மாலையில் மழை பெய்த போது ஆட்டு கொட்டகையில் அவர் படுத்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கியதில் பீரப்பா படுகாயம் அடைந்தார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் நேற்று அதிகாலையில் பரிதாபமாக இறந்து விட்டார். இதன்மூலம் கர்நாடகத்தில் பெய்த மழைக்கு 9 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

கனமழைக்கு விவசாய பயிர்களும் தண்ணீரில் மூழ்கி சேதம் அடைந்தது. பல்வேறு மாவட்டங்களில் வெங்காயம் தண்ணீரில் மூழ்கி நாசமானது. கோலார் மாவட்டத்தில் மழையுடன் சூறைக்காற்று வீசியதால் மாங்காய்கள் விழுந்ததால், விற்பனைக்கு முன்பாக மாங்காய்கள் நாசமாகி விட்டதாக விவசாயிகள் கண்ணீர் சந்தினார்கள்.

3 ஆயிரம் வாழை மரங்கள்

இந்த நிலையில், சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் நேற்று முன்தினம் மழை பெற்றிருந்தது. இதில், பசவட்டி கிராமத்தை சேர்ந்த வீரண்ணா என்பவருக்கு சொந்தமான வாழைத்தோட்டம் முற்றிலும் நாசமானது. வீரண்ணா 3 ஏக்கரில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை வளர்த்திருந்தார். நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் 3 ஆயிரம் வாழை மரங்களும் அடியோடு சாய்ந்து விட்டது.

மனைவியின் நகைகளை அடகு வைத்து வாழை மரங்கள் வளர்த்து வந்ததாகவும், அனைத்து மரங்களும் அடியோடு சாய்ந்து விட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயி வீரண்ணா கண்ணீர் மல்க தெரிவித்தார். கர்நாடகத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை உயிர் சேதத்துடன், பெரும் பாதிப்பையும் மக்களுக்கு கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், கர்நாடகத்தில் மேலும் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்

துள்ளது.


Next Story