உலகின் 'சைவ நாடு' இந்தியா ரஷியாவில் 99 சதவீதம் அசைவப் பிரியர்கள்
சைவப்பிரியர்கள் மிகவும் குறைவாக உள்ள நாடு ரஷியா ஆகும்.
புதுடெல்லி,
இப்போதெல்லாம் பொது விருந்து நிகழ்ச்சிகளில் 'நான் சைவம்' என்று பலரும் சொல்லிக்கொள்கிறார்கள். சைவத்தின் மீதான மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. இதனால் விருந்துகளில் சைவப் பிரியர்களுக்கென தனியாகப் பந்தி நடக்கிறது. இது நமது நாட்டில் மட்டும்தான் அதிகமா என்றால் ஆமாம் என்றே சொல்லவேண்டும். சைவ உணவுப்பிரியர்கள் அதிகமாக வாழும் நாடாக இந்தியா உள்ளது. உலகின் 'சைவ நாடு' என்றும் இனி இந்தியாவை சொல்லலாம்.
பல்வேறு விஷயங்களில் புள்ளி விவரங்களை சேகரிக்கும் உலக அளவிலான அமைப்பு ஒன்று வெளியிட்ட சைவப்பிரியர்கள் அதிகம் உள்ள நாடுகளின் வரிசையில் முதல் நாடாக இந்தியா இடம் பிடித்து உள்ளது. இந்தியாவில் 20 முதல் 39 சதவீதம் பேர் வரை அசைவ உணவுகளை உண்பதில்லை எனத்தெரிய வந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக மெக்சிகோவில் 19 சதவீதம் பேர் சைவம் உண்பவர்களாக உள்ளனர். தைவானில் 14 சதவீதம் பேரும், இஸ்ரேலில் 13 சதவீதம் பேரும், ஆஸ்திரேலியாவில் 12.1 சதவீதம் பேரும் சைவப்பிரியர்கள்.
சைவப்பிரியர்கள் மிகவும் குறைவாக உள்ள நாடு ரஷியா ஆகும். அங்கு 1 சதவீதம் பேரே சைவம் சாப்பிடுகிறார்கள். மீதி 99 சதவீதம் பேர் அசைவம் உண்கிறார்கள். அப்படியென்றால் உலகின் 'அசைவ நாடு' ரஷியாதான். அமெரிக்கா மற்றும் சீனாவில் தலா 5 சதவீதம் பேர் அசைவம் சாப்பிடுவதில்லை. அதே போல இங்கிலாந்தில் 10 சதவீதம் பேரும், ஜப்பானில் 9 சதவீதம் பேரும் அசைவம் சாப்பிடுவதில்லை.