12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கண்டக்டர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட்டு மறுப்பு
12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கண்டக்டர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்ய கர்நாடக ஐகோர்ட்டு மறுத்து விட்டது. மரபணு சோதனை அறிக்கையை காரணமாக ஏற்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
பெங்களூரு:
மரபணு பரிசோதனை
மைசூருவை சேர்ந்த 43 வயது நபர் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். அந்த கண்டக்டர் தனது உறவுக்கார பெண்ணின் மகளான 12 வயது சிறுமியை கற்பழித்து கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து அந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின்பேரில் கண்டக்டர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. பின்னர் கண்டக்டருக்கு மரபணு பரிசோதனையும் எடுக்கப்பட்டது. ஆனால் மரபணு பரிசோதனை அறிக்கை வரும் முன்பே போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் மரபணு பரிசோதனை அறிக்கை வெளிவந்தது. அந்த அறிக்கையில் கண்டக்டரின் ரத்த மாதிரியும், சிறுமியின் வயிற்றில் வளரும் சிசுவின் ரத்த மாதிரியும் ஒத்துப்போகவில்லை என்று கூறப்பட்டு இருந்தது. இதனால் தன் மீது பதிவான போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் கண்டக்டர், மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்பு நடந்து வந்தது.
பொய்யாக்க முடியாது
இந்த நிலையில் அந்த மனு மீது இறுதி விசாரணை நடந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வக்கீல் பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்கை தொடர வேண்டும் என்று வாதிட்டார். ஆனால் மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் மரபணு பரிசோதனை அறிக்கையை காரணம் காட்டி போக்சோ வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி நாகபிரசன்னா கூறும்போது, மரபணு பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் வயிற்றில் வளரும் கருவுக்கு, மனுதாரர் காரணமில்லை என்று கூறுவதை முழுவதுமாக காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்காக பொய்யான மரபணு பரிசோதனை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது என்று கூற முடியாது. பாதிக்கப்பட்ட சிறுமி தன் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி கூறியதை பொய்யாக்க முடியாது என்று கூறிய நீதிபதி மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.