மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை: 55 மணி நேரத்திற்கும் மேலாக போராடி மீட்கப்பட்டு பலியான சோகம்...!
மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்குப் போராடிய இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
போபால்,
மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 3 நாட்களாக உயிருக்குப் போராடிய இரண்டரை வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் செஹோர் மாவட்டம் முங்காவல்லி கிராமத்தில் வீட்டின் அருகில் கடந்த 6-ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை சிருஷ்டி பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணற்றின் உள்ளே திடீரென தவறி விழுந்தாள்.
முதலில் 30 அடியில் சிக்கியிருந்த குழந்தையை மீட்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டது. அதில் ஏற்பட்ட அதிர்வால் சுமார் 100 அடி ஆழத்திற்கு சறுக்கிச் சென்று குழந்தை சிக்கிக் கொண்டது. இதனையடுத்து, குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட ரோபோட்டிக் மீட்புக் குழுவினர் கிணற்றுக்குள் ரோபா ஒன்றை அனுப்பி தரவுகளை சேகரித்தனர். அதனடிப்படையில் ரோபோ ப்ரோக்கிராம் செய்யப்பட்டு குழந்தையை கிணற்றிலிருந்து மீட்டனர்.
சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழந்தையை மீட்டனர். ஆனால் அதற்குள் ஆழ்துளை கிணற்றுக்குள்ளேயே குழந்தை உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தை உயிரிழந்ததை கேட்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
மத்திய பிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் உயிரிழந்த 2.5 வயது குழந்தைக்கு ஆழ்ந்த இரங்கல் என ம.பி. முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தவறு செய்தவரகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.