பெங்களூருவில் 3 வயது பெண் குழந்தை பலாத்காரம் செய்து கொலை; தாயின் கள்ளக்காதலன் கைது


பெங்களூருவில் 3 வயது பெண் குழந்தை பலாத்காரம் செய்து கொலை; தாயின் கள்ளக்காதலன் கைது
x
தினத்தந்தி 2 Feb 2023 12:15 AM IST (Updated: 2 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 3 வயது பெண் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்ற தாயின் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

கள்ளக்காதல்

பெங்களூரு காமாட்சி பாளையா போலீஸ் எல்லைக்குட்பட்ட காவேரிபுரா பகுதியில் கணவரை பிரிந்த பெண் ஒருவர் 3 வயது பெண் குழந்தையுடன் வசித்து வந்தார். ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த அவருக்கு 26 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 30-ந் தேதி அந்த பெண் வெளியே சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது, குழந்தை சுயநினைவின்றி மயங்கி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அந்த வாலிபரிடம் கேட்டுள்ளார்.

பலாத்காரம் செய்து கொலை

அப்போது அவர், தன் மீது குழந்தை அசுத்தம் செய்ததாகவும் இதனால் அவளை தான் அடித்ததாகவும், இதன்காரணமாக அவள் சுயநினைவை இழந்ததாகவும் தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பெண், தனது மகளை தூக்கிக் கொண்டு விக்டோரியா அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

அவருடன் கள்ளக்காதலனான வாலிபரும் சென்றார். அப்போது அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மேலும், குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்காரணமாக குழந்தை இறந்ததாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதனை கேட்டு அவளது தாய் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

வாலிபர் கைது

இதற்கிடையே, குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறும் வரை அங்கிருந்த வாலிபர் திடீரென்று தலைமறைவாகி விட்டார். இதனால் அவர் தான் குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய், காமாட்சிபாளையா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கள்ளக்காதலனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரை போலீசார் கைது செய்தனர்.

அப்போது அவர், குழந்தையை பலாத்காரம் செய்து கொன்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து காமாட்சி பாளையா போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story