4 வயது பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது
ஹலகூர் அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த 4 வயது பெண் சிறுத்தை கூண்டில் சிக்கியது. இதனால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
ஹலகூர்:
சிறுத்தை அட்டகாசம்
மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே சிவனசமுத்திரா கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில தினங்களாக சிறுத்தை ஒன்று வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் பீதியடைந்த அந்தப்பகுதி மக்கள், வீடுகளிலேயே முடங்கினர்.
மேலும், தொடர் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி வனத்துறையினரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க உறுதி அளித்தனர்.
கூண்டில் சிக்கியது
அதன்படி வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்தில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வெளியேறிய அந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது.
இதுபற்றி அறிந்ததும் அந்தப்பகுதியை சேர்ந்த மக்கள் அங்கு திரண்டு வந்தனர். இதுபற்றி வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர், இரும்பு கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர்.
மக்கள் நிம்மதி
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இது 4 வயது நிரம்பிய பெண் சிறுத்தை ஆகும். அந்த சிறுத்தை அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்படும் என்றார். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சிக்கி உள்ளதால் அந்தப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.