6 வயது ஆண் சிறுத்தை கூண்டில் சிக்கியது
மைசூரு:-
மைசூரு தாலுகா இலவாலா அருகே மைதுனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து கடந்த சில மாதங்களாக சிறுத்தை ஒன்று வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்தது. இதனால் பீதியடைந்த கிராம மக்கள், விளைநிலங்களுக்கு செல்லாமலும், வெளியே வராமலும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி வனத்துறையினரும் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்தனர். பின்னர் அந்தப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இரும்பு கூண்டை வைத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து உணவு தேடி வந்த அந்த சிறுத்தை, வனத்துறையினர் வைத்த இரும்பு கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் நேற்று காலை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் வனத்துறையினர் கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியதால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், பிடிபட்டது 6 வயது நிரம்பிய ஆண் சிறுத்தை ஆகும். அந்த சிறுத்தை நாகரஒலே வனப்பகுதியில் விடப்படும் என்றார்.