நாயுடன் விளையாடியபோது கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் பலி
நாயுடன் விளையாடியபோது கிணற்றில் தவறி விழுந்து 7 வயது சிறுவன் உயிரிழந்தான்.
பெங்களூரு:
உத்தர கன்னடா மாவட்டம் ஒன்னாவர் தாலுகாவில் நாகபூஷன் என்ற 7 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வந்தான். அந்த சிறுவன் தனது வீட்டின் அருகே உள்ள நிலத்தில் விளையாடுவது வழக்கம். இந்த நிலையில் நாகபூஷன், நேற்று தனது நாயுடன் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். அந்த சமயத்தில் அருகில் உள்ள தரைமட்ட கிணற்றில் சிறுவன் தவறி விழுந்தான். இதையடுத்து சிறுவன் கத்தி கூச்சலிட்டான். ஆனால் அந்த பகுதியில் யாரும் இல்லாததால் சிறுவனது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை. சிறிது நேரத்தில் சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தான். இதற்கிடையே விளையாட சென்ற சிறுவன், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் பயந்துபோன பெற்றோர், அருகில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை. அப்போது தான் சிறுவன் கிணற்றில் தவறிவிழுந்து இருக்கலாம் என அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது கிணற்றில் இருந்து சிறுவன் பிணமாக மீட்கப்பட்டான். இதையடுத்து அவனது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.