விலைக்கு வாங்கிய நிலையில் மீண்டும் வளர்ப்பாளரின் வீட்டுக்கே சென்றுவிட்ட புறா


விலைக்கு வாங்கிய நிலையில் மீண்டும் வளர்ப்பாளரின் வீட்டுக்கே சென்றுவிட்ட  புறா
x

விலைக்கு வாங்கிய நிலையில் மீண்டும் வளர்ப்பாளரின் வீட்டுக்கே சென்றுவிட்ட புறாவை திருப்பிக்கேட்ட வாலிபரையும், அவரது குடும்பத்தினரையும் என 5 பேரை வியாபாரி ஒருவர் கத்தியால் குத்தினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கோலார் தங்கவயல்:-

விலைக்கு வாங்கிய புறா

கோலார் மாவட்டம் மாலூர் டவுன் சாந்தி சர்க்கிள் பகுதியை சேர்ந்தவர் இம்ரான்(வயது 32). வியாபாரியான இவர் புறாக்களை வளர்த்து அவற்றை விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவருக்கும், இம்ரான் புறா ஒன்றை விற்பனை செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு ராமு, புறாவை பறக்கவிட்டுள்ளார். பின்னர் அது வீட்டுக்கு வரவில்லை. அந்த புறா மீண்டும் இம்ரானின் வீட்டுக்கே சென்றிருந்தது. இதுபற்றி அறிந்த ராமு, இம்ரானிடம் கேட்டுள்ளார். அப்போது உங்கள் வீட்டுக்குதான் புறா வந்துள்ளது, எனவே புறாவை திருப்பி தந்துவிடுங்கள் என்று இம்ரானிடம் ராமு கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான் மற்றும் ராமு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த இம்ரான், ராமுவை கத்தியால் பலமாக தாக்கி உள்ளார். அதில் ராமு பலத்த கத்திக்குத்து காயம் அடைந்தார். இதைப்பார்த்த ராமுவின் அண்ணன் நாகராஜ் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இம்ரானை தடுக்க முயன்றார்.

படுகாயம்

அப்போது அவரையும் இம்ரான் கத்தியதால் குத்தி உள்ளார். இதை அறிந்த ராமுவின் உறவினர்களான ராஜேஷ்வரி, நாகவேணி, சத்தியகலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அவர்களையும் இம்ரான் கத்தியால் தாக்கி உள்ளார். பின்னர் இம்ரான் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அப்பகுதி மக்கள் விரைந்து வந்து காயம் அடைந்த ராமு, அவரது அண்ணன் நாகராஜ், உறவினர்களான ராஜேஷ்வரி, நாகவேணி, சத்தியகலா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் இம்ரானை பிடித்து கைது செய்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இம்ரானால் கத்தியால் குத்தப்பட்டதில், ராமுவின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் மேல்சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Next Story