சிறுமியை சுத்தியலால் அடித்து கொன்ற கொடூர தந்தை
மது அருந்த வேண்டாம் என அறிவுரை கூறியதால் சிறுமியை சுத்தியலால் தந்தையே அடித்து கொன்றார். மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மைசூரு:-
மதுபோதையில் தகராறு
மைசூரு அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுவாமி. கூலி தொழிலாளி. இவரது மகள்கள் குசுமா (வயது 14), தன்யாஸ்ரீ (4). இந்த நிைலயில் சுவாமி அளவுக்கு அதிகமாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததாக தெரிகிறது. இதனால் அவர் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுவாமி, மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் அவர் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது, அவர்களது மகள்கள் குசுமாவும், தன்யாஸ்ரீயும் அவரை தடுத்துள்ளனர்.
சுத்தியலால் அடித்து கொலை
மேலும் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வர வேண்டாம் என அவருக்கு மகள்கள் அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சுவாமி, மகள்கள் என்றும் பாராமல் அவர்களை சரமாரியாக தாக்கினார். மேலும் வீட்டில் கிடந்த சுத்தியலை எடுத்து 2 பேரின் தலையிலும் தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து சுவாமி அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுவாமியின் மனைவி, 2 பேரையும் பார்த்து கதறி அழுதார். மேலும், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் குசுமா பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் தன்யாஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கைது
இதுபற்றிய தகவல் றிந்ததும் மைசூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, குடிபோதையில் வந்து தகராறு செய்ததை கண்டித்ததால் சுவாமி சுத்தியால் மகள்கள் என்றுகூட பாராமல் தாக்கியது தெரியவந்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாமியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.