உடல் உறுப்புகளை பெண் தோழிகளிடம் கூறி கேலி செய்ததால் காதலியை குத்தி படுகொலை செய்த கொடூர காதலன்


உடல் உறுப்புகளை பெண் தோழிகளிடம் கூறி கேலி செய்ததால் காதலியை குத்தி படுகொலை செய்த கொடூர காதலன்
x
தினத்தந்தி 11 Aug 2023 5:57 PM IST (Updated: 11 Aug 2023 6:33 PM IST)
t-max-icont-min-icon

கொச்சியில் ஓட்டலில் இளம்பெண்ணை வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலக்காடு,

கேரள மாநிலம் கொச்சி நகரில் ஓட்டலில் இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்தார். விவரம் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள் இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-.

கோட்டயம் மாவட்டம் சங்கனார் சேரி நகர் பகுதியில் வசிப்பவர் ரேஷ்மா ரவி (27). இவரது காதலன் கோழிக்கோடு சாலிபாலுசேரி பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத் (30). இவர் கொச்சி நகரில் வையம்பள்ளி என்ற இடத்தில் ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இவரும் ரேஷ்மாவும் சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்படுத்திக் கொண்டு பழகி வந்தார்கள். கடந்த சில மாதமாக ரேஷ்மா ரவி, நவ்ஷத்தின் உடல் உறுப்புகள் குறித்தும், உடல் நிலை சரியில்லாதது குறித்தும் விமர்சனம் செய்து பெண் தோழிகளுக்கு கேலியும் கிண்டலுமாக தகவல் அனுப்பி உள்ளார். இந்த சம்பவம் நவ்ஷாத்திற்க்கு தெரிய வர அவர் ரேஷ்மாவின் மீது பயங்கர கோபம் கொண்டார்.

என்னை பற்றியும் என்னுடைய உடல் உறுப்புகள் பற்றியும் நீ தேவையில்லாமல் நண்பர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பி என்னை கேலி செய்து உள்ளாய். அது சரி இல்லை இனிமேல் அந்த மாதிரி செய்யாதே என ரேஷ்மா ரவியை எச்சரித்துள்ளார். ஆனால் ரேஷ்மா ரவி அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும் மேலும் விமர்சனம் செய்து தனது நண்பர்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் அனுப்பினார்.

இதில் கோபம் அடைந்த நவ்ஷாத் நேற்றிரவு அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு ரேஷ்மா ரவியை வரவழைத்தார்.அப்போது சமூக வலைதளங்கள் பதிவிடுவது குறித்து இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த நவ்ஷாத் தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ரேஷ்மாவின் கழுத்தில் பலமுறை குத்தினார்.

பின்பு அவர் மற்ற இடங்களிலும் ரேஷ்மாவை குத்தியதை தனது செல்போன் மூலம் படமாக பிடித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து ரேஷ்மாவை கொலை செய்து விட்டேன் என நவ்ஷாத் ஹோட்டல் உரிமையாளரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் இது குறித்து கொச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், ரேஷ்மாவின் உடலை மீட்டு கொச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

எனது உடல் உறுப்புகளை குறித்து நண்பர்களிடம் மோசமாக விமர்சனம் செய்ததற்காக காதலி ரேஷ்மாவை குத்தி கொலை செய்ததாக நவ்ஷாத் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story