பணப்பட்டுவாடா இல்லாத தேர்தல் நடத்தப்படும்
கிருஷ்ணராஜா சட்டசபை தொகுதியில் பணப்பட்டுவாடா இல்லாத தேர்தல் நடத்தப்படும் என்று ராமதாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
மைசூரு:
மைசூரு கிருஷ்ணராஜா தொகுதி சாமுண்டிபுரம் பூத்தாளா மைதானத்தில் பா.ஜனதா கட்சி தொண்டர்களின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டை கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் நளின் குமார் கட்டீல் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இதில் கலந்துகொண்ட கிருஷ்ணராஜா தொகுதி எம்.எல்.ஏ. ராமதாஸ் பேசியதாவது:-
ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் எந்த கட்சி ஆனாலும் வாக்காளர்களுக்கு, கட்சி தொண்டர்களுக்கு பணம், மதுபானம் மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கி ஓட்டு கேட்கிறார்கள். இதனால் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. இதை தவிர்க்க எனது தொகுதியில் வரும் சட்டசபை தேர்தலில் பணப்பட்டுவாடா இல்லாத தேர்தல் நடத்தப்படும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துரைத்து மக்களிடம் வாக்கு சேகரிக்கப்படும். கிருஷ்ணராஜா தொகுதியில் நான் உழைத்தது மக்களுக்கு தெரியும்.
இவ்வாறு அவர் பேசினார்.