காபி தோட்டத்தில் நகர முடியாமல் கிடந்த நாகபாம்பு
காபி தோட்டத்தில் நகர முடியாமல் கிடந்த நாகபாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிக்கமளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் சிருங்கேரி தாலுகாவில் ஹரந்தூர் கிராமம் உள்பட பல்வேறு கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இதனால் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் ஊருக்குள் புகுந்து விடுகின்றன. இந்த நிலையில் ஹரத்தூர் கிராமத்தில் காபி தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்திற்கு வேலைக்கு நேற்று காலையில் தொழிலாளர்கள் சென்றனர். அப்போது அங்கு 10 அடி நீள ராஜ நாகம் கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த ராஜ நாகம் நகர முடியாமல் அங்கேயே இருந்தது. இதையடுத்து அவர்கள் உடனடியாக அந்த பகுதியை சேர்ந்த பாம்புபிடி வீரரான அர்ஜுனுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் அர்ஜுன் சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் ராஜ நாகத்தை லாவகமாக பிடித்தார். ஆனால் அந்த பாம்பு சோர்வாக இருந்தது. இதையடுத்து அந்த பாம்பை ஒரு பையில் போட்டு கொண்டு, அதை கால்நடை ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு சென்றார். அதை பரிசோதித்த டாக்டர், ராஜநாகத்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இருப்பதாக கூறினார். இதையடுத்து ராஜ நாகத்திற்கு சிகிச்சை அளித்தார். பின்னர், அந்த ராஜ நாகத்தை, அர்ஜுன் வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டார். தோட்டத்தில் கிடந்த 10 அடிநீள ராஜநாகத்தால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.