பள்ளி மாணவன் பையில் பதுங்கிய நாகப்பாம்பு
சிவமொக்காவில் பள்ளி மாணவன் பையில் பதுங்கிய நாகப்பாம்பால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவமொக்கா:-
சிவமொக்கா மாவட்டம் ரிப்பன்பேட்டையை அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் புவன். இந்த சிறுவன் அதே பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் சிறுவன் பள்ளிக்கு சென்றிருந்தான். அப்போது ஆசிரியர் பாடபுத்தகத்தை எடுக்கும்படி கூறினர். சிறுவன் புவன் புத்தகத்தை எடுப்பதற்காக பையை திறந்தான். அப்போது பையினுள் நாகப்பாம்பு ஒன்று இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த புவன் தனது நண்பரான மணிகண்டனிடம் கூறினான். மணிகண்டன் பையை திறந்துப்பார்த்துவிட்டு, உடனே ஆசிரியரிடம் கூறினான். இதையடுத்து ஆசிரியர் பையை மூடிவிட்டு, பாம்பு பிடி வீரருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாம்பு பிடி வீரர், அதை லாவகமாக பிடித்தார். பின்னர் அந்த பாம்பை சாக்குபையில் போட்டு, சிவமொக்கா வனப்பகுதியில் கொண்டு விட்டார். இதையடுத்து சிறுவனும், சக மாணவர்களும் நிம்மதி அடைந்தனர்.