திருமணமான 10 நாட்களில் விபத்தில் சிக்கிய புதுமண தம்பதி; கணவர் பலி; இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை
ஹரிஹரா அருகே, தேனிலவுக்கு சென்றுவிட்டு திரும்பும்போது லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி கம்ப்யூட்டர் என்ஜினீயர் தம்பதி விபத்தில் சிக்கினர். இதில் கணவர் பலியானார். இளம்பெண்ணுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிக்கமகளூரு:
கம்ப்யூட்டர் என்ஜினீயர்
தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா ஜிகிலி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜப்பா. இவரது மனைவி ஷோபா. இவர்களது மகன் சஞ்சய்(வயது 28). கம்ப்யூட்டர் என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கணினி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், பெலகாவி மாவட்டம் பைலஹொங்கலா பகுதியைச் சேர்ந்த பிரீத்தி(28) என்ற கம்ப்யூட்டர் என்ஜினீயருக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஹரிஹராவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு புதுமண தம்பதி மோட்டார் சைக்கிளில் தேனிலவுக்கு புறப்பட்டனர். அவர்கள் உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணா, சிவமொக்கா மாவட்டம் சிக்கந்தூர், உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி ஆகிய இடங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்குள்ள ஆன்மிக தலங்கள், சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்தனர். மேலும் விடுதிகளிலும் அறை எடுத்து தங்கி தேனிலவை கொண்டாடினர்.
விபத்தில் சிக்கினர்
பின்னர் அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் ஹாவேரி நோக்கி புறப்பட்டனர். ஹாவேரி மாவட்டம் ஹிரேகெரூர் தாலுகா கோடதா கிராமம் அருகே உள்ள சர்க்கரை ஆலை சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது கரும்பு பாரத்துடன் சாலையோரம் நின்று கொண்டிருந்த ஒரு டிராக்டர் பின்புறம் எதிர்பாராத விதமாக இவர்களது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து சஞ்சய், பிரீத்தி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தனர். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஓடி வந்து இருவரையும் மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
சாவு
பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக தாவணகெரேவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் நேற்று முன்தினம் இரவு சஞ்சய் இறந்தார். பிரீத்திக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் சஞ்சய் இறந்தது பற்றி பிரீத்தியிடம் தெரிவிக்கப்பட்டது. அதைக்கேட்டு அவர் கதறி அழுதார்.
பின்னர் சஞ்சயின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் ஹரிஹரா தாலுகா ஜிகலி கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அங்கு பிரீத்தியும் ஸ்ட்ரச்சர் மூலம் அழைத்து வரப்பட்டார். அவர் தனது கணவரின் முகத்தை கைகளால் வருடி கதறி அழுதது அங்கிருந்த அனைவரையும் கண்கலங்க செய்தது.
சோகம்
அதையடுத்து மீண்டும் பிரீத்தி சிகிச்சைக்காக தாவணகெரேவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் சஞ்சயின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. திருமணமான 10 நாட்களில் புதுமண தம்பதியான கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் விபத்தில் சிக்கியது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் சிக்கிய புதுமண தம்பதி இன்னும் 20 கிலோ மீட்டர் பயணித்து இருந்தால் அவர்கள் தங்களது வீடுகளை சென்றடைந்து இருப்பார்கள் என்றும், அதற்குள் அவர்களது வாழ்க்கையில் சோகம் ஏற்பட்டு விட்டதாகவும் அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் கூறினர். இச்சம்பவம் குறித்து ஹம்சாபோவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.