அரசியலில் ஒக்கலிகர் சமூகத்தை ஒழித்துக்கட்ட மறைமுக திட்டம்; பா.ஜனதா மீது குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
உரிகவுடா-நஞ்சேகவுடா பெயரில் படம் எடுக்கும் விவகாரத்தில் அரசியலில் ஒக்கலிகர்களை ஒழித்துக்கட்ட மறைமுக திட்டம் வகுத்துள்ளதாக பா.ஜனதா மீது குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
பெங்களூரு:
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஒடுக்க வேண்டும்
பொய் தகவல்களை பரப்பி கர்நாடகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்யும் பா.ஜனதாவின் கவனம் தற்போது ஒக்கலிகர்கள் மீது திரும்பியுள்ளது. சுயமரியாதையுடன் வாழ்க்கையை நடத்தும் ஒக்கலிகர்களை எப்படியாவது ஒடுக்க வேண்டும் என்று பா.ஜனதா மறைமுக திட்டத்துடன் செயல்படுகிறது. இந்த மறைமுக திட்டத்தில் உரிகவுடா, நஞ்சேகவுடா விவகாரம் ஒரு பாகம் ஆகும்.
திப்பு சுல்தானை கொன்றவர்கள் உரிகவுடா, நஞ்சேகவுடா என்று கூறி ஒக்கலிகர் சமுதாயத்திற்கு களங்கத்தை ஏற்படுத்த வரலாற்று சதியை பா.ஜனதா செய்கிறது. பிரதமர் வருகை தந்தபோது பாலகங்காதரநாத சுவாமி நுழைவு வாயில் வளைவுக்கு
உரிகவுடா, நஞ்சேகவுடா பெயர் கொண்ட பேனரை கட்டியது மிகப்பெரிய துரோகம். குலம், குலத்தின் குருவுக்கு இழைக்கப்பட்ட இந்த கோர அவமானத்தால் கொதிப்பில் இருக்கும் ஒக்கலிகர்களை மேலும் களங்கப்படுத்த மந்திரி ஒருவர் முயற்சி செய்கிறார்.
சினிமா தயாரிப்பாளரான மந்திரி முனிரத்னா, உரிகவுடா, நஞ்சேகவுடா பெயரில் சினிமா எடுக்க பெயர் பதிவு செய்துள்ளார். இதன் மூலம் ஒக்கலிகர்களின் கவுரவத்தை திரையிலும் பாழ்படுத்த சதி செய்துள்ளனர். மன வருத்தத்தில் உள்ள ஒக்கலிகர்கள் மீது மேலும் தாக்குதல் நடத்தும் விதமாக உருவாக்கப்பட்ட பொய்யை வைத்து படம் எடுத்து ஒக்கலிகர்களை வில்லன்களாக ஆக்க திட்டமிட்டுள்ளனர். இந்த துரோகத்தை ஒக்கலிகர்கள் சகித்து கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை.
வரலாற்றை திரிக்கும் இந்த மோசமான அரசியலுக்கு காரணம் யார்?. முனிரத்னாவுக்கும், மண்டியா ஒக்கலிகர்களுக்கும் என்ன சம்பந்தம்?. முனிரத்னா எடுக்கும் படத்திற்கு பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி கதை எழுதுகிறாரா?. கற்பனை பெயர்களான உரிகவுடா, நஞ்சேகவுடா பெயரில் அவர் தினமும் விஷத்தை கக்குகிறார். சிடி.ரவியும், மந்திரி அஸ்வத் நாராயணும் குலத்துரோகிகள்.
மறைமுக திட்டம்
ஒவ்வொரு உணர்வு பூர்வமான விஷயத்திலும் ஓட்டு அரசியல் செய்யும் பா.ஜனதா கர்நாடகத்தை ஒரு பரிசோதனை கூடமாக பயன்படுத்துகிறது. இந்த விவலகாரத்தில் அரசியல் ரீதியாக ஒக்கலிகர் சமூகத்தை ஒழித்துக்கட்ட பா.ஜனதா மறைமுக திட்டம் வகுத்துள்ளது.
இவ்வாறு குமாரசாமி
குறிப்பிட்டுள்ளார்.