மோதிய காரின் பம்பரில் சிக்கி 70 கிலோ மீட்டர் பயணித்த நாய்
தட்சிண கன்னடாவில் மோதிய காரின் பம்பரில் சிக்கி 70 கிலோ மீட்டர் பயணித்த நாய் காயமின்றி உயிர் தப்பியது.
மங்களூரு:-
தட்சிண கன்னடாவில் மோதிய காரின் பம்பரில் சிக்கி 70 கிலோ மீட்டர் பயணித்த நாய் காயமின்றி உயிர் தப்பியது.
தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கபக்கா பகுதியை சேர்ந்த தம்பதி, தங்கள் காரில் குக்கே சுப்பிரமணியா கோவிலுக்கு சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் சாமி தரிசனம் முடிந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது அவர்கள் பால்பா பகுதியில் வந்தபோது, காரின் குறுக்கே நாய் ஒன்று வந்தது. இதனால் டிரைவர் காரை நிறுத்த முயன்றார். ஆனாலும் நாய் மீது கார் மோதியது. இதையடுத்து காரில் இருந்தவர்கள் கீழே இறங்கி பார்த்தனர். ஆனால் அங்கு நாயை காணவில்லை. கார் மோதிய அதிர்ச்சியில் அந்த நாய் ஓடியிருக்கலாம் என கருதி அவர்கள் காரில் வீட்டுக்கு திரும்பினர்.
வீட்டுக்கு வந்து பார்த்தபோது, காரின் பம்பரில் நாய் சிக்கி உயிருடன் இருந்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த அவர்கள், அந்த நாயை மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் நாயை மீட்க முடியாததால், மெக்கானிக் கடைக்கு சென்று பம்பரை கழற்றி நாயை பத்திரமாக மீட்டனர். நாய் எந்த வித காயமும் இன்றி உயிர் தப்பியது. மோதிய இடத்தில் இருந்து அந்த தம்பதியின் வீடு வரை சுமார் 70 கிலோ மீட்டர் அந்த நாய், காரின் பம்பரில் சிக்கி இருந்தது.