போதைப்பொருள் கடத்திய தனியார் பள்ளி நீச்சல் ஆசிரியை கைது
பெல்ஜியத்தில் இருந்து பெங்களூருவுக்கு கூரியர் மூலம் போதைப்பொருள் கடத்திய தனியார் பள்ளி நீச்சல் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ரூ.76 லட்சம் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கூரியர் பார்சலில் போதைப்பொருள்
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதற்கிடையில், விமான நிலையத்திற்கு வந்திருந்த கூரியர் பார்சல் மீது அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பார்சலை பிரித்து பார்த்தார்கள்.
அப்போது, அதற்குள் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள் இருந்தது. பெல்ஜியம் நாட்டில் இருந்து போதைப்பொருள் பெங்களூருவுக்கு கூரியர் பார்சல் மூலம் கடத்தி கொண்டு வரப்பட்டு இருந்தது. அதே நேரத்தில் பார்சலில் இருந்த முகவரி மூலமாக சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க போலீசார் முடிவு செய்தார்கள். இதற்கிடையில், கூரியா் பார்சலை வாங்க அந்த பெண் விமான நிலையத்திற்கு வந்தார்.
நீச்சல் பயிற்சி ஆசிரியை கைது
இதையடுத்து, அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்து தப்பி செல்ல அந்த பெண் முயன்றார். உடனே அவரை மடக்கி பிடித்து போலீசார் கைது செய்தார்கள். அந்த பெண், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நீச்சல் பயிற்சி ஆசிரியையாக வேலை பார்ப்பது தெரிந்தது. பெல்ஜியத்தை சேர்ந்த போதைப்பொருள் விற்கும் கும்பல்களுடன் தொடர்பை ஏற்படுத்தி கொண்டு, அவர்களிடம் இருந்து கூரியர் பார்சல் மூலமாக பெங்களூருவுக்கு போதைப்பொருட்களை அனுப்பி வைக்கும்படி பெண் கூறியுள்ளார்.
அதன்படி, அந்த பெண்ணுக்கு போதைப்பொருட்கள் அனுப்பி வைத்திருந்தது தெரிந்தது. அந்த பார்சலில் 5 கிலோ எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளையும் போலீசார் பறிமுதல் செய்தாா்கள். அவற்றின் மதிப்பு ரூ.76 லட்சம் ஆகும். கைதான பெண் மீது விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.