காட்டு யானை தாக்கி விவசாயி சாவு
ஹாசனில் காட்டுயானைகள் தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.
ஹாசன்:
ஹாசன் தாலுகா மல்லேனஹள்ளி, மடப்பூர், கலத்தம்மனஹள்ளி, வர்த்திகெரே ஆகிய கிராமங்கள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காட்டு யானை ஒன்று விளைநிலங்களில் புகுந்து தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதியில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று மல்லேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி தீர்த்தா (27) என்பவர் நேற்று வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை, தோட்டத்துக்குள் நுழைந்தது.
அப்போது யானையை பார்த்ததும், தீர்த்த அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனாலும், காட்டு யானை அவரால் விடாமல் துரத்தி சென்று தும்பிக்கையால் தூக்கி வீசியது. பின்னர் அவரை காலால் மிதித்தது. இதில் தீர்த்தா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது, காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.