தனியார் நிறுவன பெண் ஊழியர் கொன்று புதைப்பு
நட்பை ஏற்க மறுத்ததால் தனியார் நிறுவன பெண் ஊழியரை கொன்று புதைத்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
பாகலூர்:-
தனியார் நிறுவன ஊழியர்
பெங்களூரு இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தீபா. இவர் ஒசகோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். அதே நிறுவனத்தில் பீம்ராவ் என்பவர் கார் டிரைவராக வேலை செய்தார். இந்திரா நகரில் இருந்து தீபாவை, பீம்ராவ் தான் தனது காரில் அழைத்து வந்துள்ளார். அப்போது தீபா மீது பீம்ராவுக்கு ஒருதலை காதல் ஏற்பட்டது.
எனினும் அதை கூறுவதற்கு பயந்த பீம்ராவ், தீபாவிடம் இருவரும் நண்பர்களாக இருப்போம் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு அந்த பெண் மறுத்துள்ளார். இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி வழக்கம்போல் நிறுவனத்தில் இருந்து தீபாவை தனது காரில் அழைத்து சென்றனர். அப்போது தன்னுடைய தோழியாக இருக்குமாறு பீம்ராவ் அவரை கேட்டுள்ளார்.
மாயமானதாக புகார்
அப்போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பீம்ராவ் காரில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து தீபாவை தாக்கினார். இதில் காயமடைந்த தீபா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தீபாவின் உடலை காரில் எடுத்து சென்ற பீம்ராவ், பாகலூர் பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் புதைத்துவிட்டு தப்பி சென்றனர்.
வேலைக்கு சென்ற மகள் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் இந்திராநகர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பாகலூர் புறநகர் பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதியில் பாகலூர் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
டிரைவர் கைது
மேலும் பெண் பிணம் ஒன்றை தோண்டி எடுத்தனர். விசாரணையில் மாயமானதாக தேடப்பட்டு வந்த தீபா என்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பீம்ராவை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த கார் டிரைவர் பீம்ராவை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், தனது நட்பை ஏற்காததால் ஆத்திரம் அடைந்து, தீபாவை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.