தகவல் அளிக்காத நகரசபை கமிஷனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத நகரசபை கமிஷனருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொள்ளேகால்:
சாம்ராஜ்நகர் மவட்டம் கொள்ளேகால் நகரசபை கமிஷனராக இருந்து வருபவர் லிங்கராஜு. இந்த நிலையில் கொள்ளேகால் தாலுகா உங்கள்ளி கிராமத்தைச் சேர்ந்த லிங்கராஜ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நகரசபை சார்பில் சாலை சீரமைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு பணிகளுக்காக செய்யப்பட்ட செலவினங்கள் குறித்து தகவல் கேட்டு நகரசபையில் விண்ணப்பித்து இருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அதற்கு பதில் வழங்காமல் நகரசபை கமிஷனர் லிங்கராஜு காலம் தாழ்த்தி வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு இதுவரையில் பதில் அளவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் லிங்கராஜ், பெங்களூருவில் உள்ள மாநில தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், தகவல் அளிக்காத கொள்ளேகால் நகரசபை கமிஷனர் லிங்கராஜுவுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.