பெங்களூரு விமான கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ வீரர்களுக்கான பறக்கும் உடை


பெங்களூரு விமான கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ வீரர்களுக்கான பறக்கும் உடை
x
தினத்தந்தி 16 Feb 2023 2:42 AM IST (Updated: 16 Feb 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு விமான கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ வீரர்களுக்கான பறக்கும் உடை இடம்பெற்றுள்ளது.

பெங்களூரு:

பறக்கும் உடை

பெங்களூரு எலகங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்பட 27 நாடுகளின் ராணுவ தளவாடங்கள், ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் தயாரிப்பு நிறுவனங்களின் படைப்புகள் 809 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

இதில் அனைவரையும் கவரும் வகையில் 'ஜெட்பேக் சூட்' என்ற ராணுவ வீரர்களுக்கான பறக்கும் ஆடை இடம்பெற்றுள்ளது. ராணுவ வீரர் பறவை போல் பறந்து சென்று பணிகளை செயல்படுத்த முடியும். இதை பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான அப்சலூட் காம்போசிட் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த உடையை இந்திய ஆயுதப்படை சோதனை செய்ய இருப்பதாகவும், சோதனையில் ஜெட்பேக் சூட்டின் செயல்பாடு திருப்திகரமாக இருந்தால் அதனை கொள்முதல் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

80 கிலோ வீரர் பறக்கலாம்

இந்த ஜெட்பேக் சூட்டின் பின்பகுதியில் டர்போ என்ஜின் உள்பட 5 என்ஜின்கள் உள்ளது. 3 கிலோ எடையிலான இந்த உடையில் 80 கிலோ எடையிலான வீரர் பறக்க முடியும். 10 நிமிடங்களில் 10 கிலோ மீட்டர் தூரம் பறக்கும் திறன் கொண்டது. 10 முதல் 15 மீட்டர் உயரத்தில் ஒரு மணி நேரத்திற்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ஜெட்பேக் சூட் அணிந்த வீரர்கள் பறந்து செல்ல முடியுமாம்.

இயற்கை பேரிடர், நிலச்சரிவு, தீ விபத்து, அவசர காலம் மற்றும் கட்டிட இடிபாடுகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ளவும், உடைந்த பாலங்கள் மற்றும் ஆறுகளை கடக்கவும் இது உதவியாக இருக்கும்.

70 சதவீத உள்நாட்டு உதிரிபாகங்கள்

இதுகுறித்து அப்சலூட் காம்போசிட் நிறுவன நிர்வாக இயக்குனர் ராகவ் ரெட்டி கூறுகையில், ஜெட்பேக் சூட் தயாரிக்க 2 ஆண்டுகள் ஆனது. இதுவரையிலான தயாரிப்புகளில் இது தான் கச்சிதமாக தயாரிக்கப்பட்ட பறக்கும் உடையாகும். ஜெட்பேக் சூட்டின் பின்பகுதியில் டீசல் டேங்க், எலக்ட்ரானிக்ஸ் பேக் உள்ளது. டீசல் டேங்கில் 30 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இந்த ஜெட்பேக் சூட்டை தயாரிக்க 70 சதவீத உள்நாட்டு உதிரிபாகங்களும், வெளிநாட்டு உதிரிபாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வருங்காலத்தில் இந்த ஜெட்பேக் சூட்டை முழுக்க முழுக்க உள்நாட்டு உதிரிபாகங்கள் கொண்டு தயாரிக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்திய ஆயுதப்படை பிரிவு இதற்கான முன்மொழிவு கோரிக்கை விடுத்தது. அதன் அடிப்படையில் இதை தயாரித்துள்ளோம். அடுத்த வாரம் இதன் செயல் விளக்கம் அளிக்கப்படும். இதன் செயல்பாடு திருப்திகரமாக இருந்தால் எங்களிடம் இந்திய ஆயுதப்படை இந்த ஜெட்பேக் சூட்டை கொள்முதல் செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story