காபு கடற்கரையில் மிதக்கும் உணவகம், தங்கும் விடுதி
உடுப்பி மாவட்டத்தில் உள்ள காபு கடற்கரையில் மிதக்கும் உணவகம் மற்றும் தங்கும் விடுதி அமைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் குர்மா ராவ் கூறினார்.
மங்களூரு:-
சுற்றுலா துறை
உடுப்பி மாவட்ட கலெக்டர் குர்மா ராவ் தலைமையில் அவரது அலுவலகத்தில் சுற்றுலா முன்னேற்றக்குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சுற்றுலா துறை அதிகாரிகள் உள்பட அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் குர்மா ராவ் பேசும்போது கூறியதாவது:-
காபுவில் சுற்றுலா தலமாக மிதக்கும் உணவகம், தங்கும் விடுதி ஆகியவை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான அனுமதி வழங்க வேண்டும் என்று மாநில சுற்றுலா துறையிடம் அனுமதி கோரி இருக்கிறோம். ஹின்னீர், உலியார் கிராமம் ஆகிய இடங்களிலும் மிதக்கும் உணவகம் மற்றும் தங்கும் விடுதிகள் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
மீன்வள திட்டம்
உடுப்பி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகாரிகள் முறையாக பதிவு செய்யவில்லை. இது கண்டிக்கத்தக்கது. சுற்றுலா தலங்களை பராமரிக்க ஒப்பந்தம் பெற்ற ஒப்பந்ததாரர்கள் மூலம் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை பதிவு செய்து மாதந்தோறும் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இதை அதிகாரிகள் மேற்பார்வையிட்டு உறுதி செய்திட வேண்டும்.
இவை தவிர நீர் விளையாட்டுகள் அமைப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. திராசி, மரவந்தே, காபு கடற்கரைகளில் மீன்வள திட்டம் செயல்படுத்தப்படுவதை ஆய்வு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சுற்றுலா தலங்களை பராமரிப்பதற்கான ஒப்பந்தங்களை பெற்றவர்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் தடுக்க அதிகாரிகள் கண்காணிப்பு பணியில்ஈடுபடுவது அவசியம்.
சைக்கிள் பாதை
ஹெப்ரி தாலுகா வரங்காவில் சுற்றுச்சூழல் குறித்தும், சுற்றுலா குறித்தும் பயிலரங்கம் நடத்தப்பட வேண்டும். படுபித்ரி கடற்கரையில் இருந்து படுகெரே கடற்கரை வரை வட்ட சுற்று வட்டமும், குந்தாப்பூரில் உள்ள கோடி கடற்கரையில் இருந்து டெல்டா பாயிண்ட் வரை சைக்கிள் பாதையும் அமைக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
சுற்றுலா துறையின் இணையதளத்தில் சுற்றுலா தலங்கள், அவற்றின் விவரங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை பதிவேற்றம் செய்வது அவசியம். சுற்றுலா தலங்கள் தொடர்பாக துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு, அதை சுற்றுலா நிறுவங்களுக்கு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.