காவி கொடியை ரூ.55 லட்சத்துக்கு ஏலம் எடுத்த முன்னாள் மந்தரி
நாயக்கனஹட்டி கோவில் திருவிழாவில் தேரில் கட்டியிருந்த காவி கொடியை ரூ.55 லட்சத்துக்கு முன்னாள் மந்திரி சுதாகர் ஏலம் எடுத்தார்.
சிக்கமகளூரு:-
திப்பேருத்ரசாமி கோவில் தேரோட்டம்
சித்ரதுர்கா மாவட்டம் செல்லகெரே தாலுகா நாயக்கனஹட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற திப்பேருத்ரசாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நாயக்கனஹட்டி பகுதியில் திப்பேருத்ரசாமி தேரோட்டம் நடந்தது.
இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். மேலும் தேர் மீது பழங்கள் எறிந்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர். இந்த தேரோட்டத்தையொட்டி போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ரூ.55 லட்சத்துக்கு...
இந்த நிலையில், திப்பேருத்ரசாமி கோவில் தேரோட்டம் முடிந்ததும் தேரில் கட்டப்பட்டிருக்கும் பொருட்கள் ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று தேரில் கட்டப்பட்டிருந்த காவி உள்ளிட்ட பொருட்களின் ஏலம் நடந்தது. இந்த நிலையில் தேரில் கட்டப்பட்டு இருந்த காவி கொடியை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர்.
இதனால் அதன் விலை எகிறியது. ஒவ்வொருவரும் விடப்பிடியாக ஏலம் கேட்டு விலையை பலமடங்கு உயர்த்தினர். இறுதியாக அந்த காவி கொடியை ரூ.55 லட்சத்துக்கு பா.ஜனதா முன்னாள் மந்திரி சுதாகர் ஏலம் எடுத்தார்.
அதன்பிறகு யாரும் கேட்கவில்லை. இதையடுத்து முன்னாள் மந்திரி சுதாகர், ரூ.55 லட்சம் கொடுத்து அந்த காவி கொடியை வாங்கி சென்றார். இதேபோல் பல்வேறு பொருட்களை ஏராளமானோர் போட்டி போட்டு ஏலம் வாங்கினர்.