'லிப்ட்' அமைக்க தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி சாவு
பெங்களூரு சுல்தான்பேட்டையில் ‘லிப்ட்’ அமைக்க தோண்டிய குழியில் தவறி விழுந்து சிறுமி உயிரிழந்தாள்.
சுல்தான்பேட்டை:
சிறுமி சாவு
பெங்களூரு எலகங்கா பகுதியை சேர்ந்தவர் மல்லப்பா. இவரது மனைவி கமலம்மா. இந்த தம்பதிக்கு மகேஸ்வரி (வயது6) என்ற மகள் இருந்தாள். இந்த நிலையில் மல்லப்பா தனது கண் பரிசோதனைக்காக மகள் மற்றும் மனைவியுடன் சுல்தான்பேட்டை பகுதிக்கு வந்தார். பின்னர், அவர் அந்த பகுதியில் உறவினர் புதிதாக கட்டிவரும் வீட்டிற்கு சென்றார். அவர்கள் உறவினருடன் பேசி கொண்டிருந்தனர்.
அப்போது மகேஸ்வரி அங்கு விளையாடி கொண்டிருந்தாள். இந்த நிலையில் விளையாடி கொண்டிருந்த மகேஸ்வரி திடீரென்று மாயமானதால் அதிர்ச்சி அடைந்த தம்பதி அவளை தேடி பார்த்தனர். அப்போது புதிதாக கட்டப்பட்டு வரும் அந்த வீட்டில் 'லிப்ட்' அமைக்க தோண்டப்பட்ட குழியில் தேங்கி கிடந்த தண்ணீரில் மகேஸ்வரி பிணமாக கிடந்தாள். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பதி கதறி அழுதனர்.
சோகம்
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் பிணமாக கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் உரிமையாளர் மாநகராட்சியின் விதிகளை மீறி கட்டிடம் கட்டியது தெரியவந்தது.
மேலும் புதிய கட்டிடத்தில் லிப்ட் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் தண்ணீர் தேங்கி கிடந்தது. அதில் சிறுமி மகேஸ்வரி தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.