கிராமத்திற்குள் 30 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம்


கிராமத்திற்குள் 30 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம்
x

சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஹொன்னேஹள்ளி கிராமத்திற்குள் 30 காட்டுயானைகள் கூட்டமாக புகுந்து அட்டகாசம் செய்தன. அந்த காட்டுயானைகள் தமிழ்நாடு சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன.

கொள்ளேகால்:-

காட்டுயானைகள்

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் பந்திப்பூர் புலிகள் பாதுகாப்பு வன சரணாலயம் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி கர்நாடகம், கேரளா, தமிழகம் ஆகிய 3 மாநிலங்களிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த வனப்பகுதியில் புலிகள், சிறுத்தைகள், காட்டுயானைகள், கரடிகள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் வனப்பகுதியில் இருந்து புலிகள், சிறுத்தைகள், காட்டுயானைகள் உள்ளிட்டவை அடிக்கடி உணவு, தண்ணீர் மற்றும் இரை தேடி வனப்பகுதியையொட்டிய கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது.

குறிப்பாக சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பந்திப்பூர் வனப்பகுதியையொட்டி வடல்பரா, ஹொன்னேஹள்ளி, எலசகெரே, அரக்கலவாடி, மூடலஹொசஹள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குள் அடிக்கடி வனவிலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

பயிர்கள் நாசம்

அதேபோல் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து கூட்டமாக வெளியேறிய காட்டுயானைகள் ஹொன்னேஹள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. அவைகள் கிராமத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாட்டை தாக்கி கொன்றன. பின்னர் ஒரு வீட்டை சூறையாடின. இந்த சந்தர்ப்பத்தில் வீட்டின் பின்பக்கம் வழியாக வீட்டில் இருந்த தம்பதி தப்பி ஓடி உயிர் தப்பினர். பின்னர் அதே கிராமத்தைச் சேர்ந்த சிக்கமாதேகவுடாவின் விளைநிலத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தன.

பின்னர் தமிழ்நாடு சத்தியமங்கலம் வனப்பகுதியை நோக்கி கூட்டமாக புறப்பட்ட காட்டுயானைகள், பின்னர் அரக்கலவாடி கிராமத்திற்குள் நுழைந்தன. 30-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் கிராமத்திற்குள் புகுந்ததால் கிராம மக்கள் பீதியில் அலறி அடித்து ஓடினர். சிலர் யானைகளின் அட்டகாசத்தை செல்போன்களில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

சத்தியமங்கலத்திற்கு விரட்டியடிப்பு

இதற்கிடையே காட்டுயானைகள், கிராமத்திற்குள் புகுந்தது குறித்து அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீப்பந்தங்கள் காண்பித்தும், மேளங்கள் அடித்தும் காட்டுயானைகளை விரட்டினர். அதையடுத்து காட்டுயானைகள் கூட்டமாக தமிழ்நாட்டுக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனப்பகுதியை நோக்கி சென்றன.


Next Story