ஆட்டை வேட்டையாடி கொன்ற சிறுத்தை
உன்சூரு அருகே ஆட்டை வேட்டையாடி கொன்ற சிறுத்தையால் பீதி. கூண்டு வைத்து பிடிக்கும்படி வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர்.
மைசூரு:-
சிறுத்தைகள் அட்டகாசம்
மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகாவில் ஊரகுப்பே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த நியைில் அந்த வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று கிராமத்திற்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஊரகுப்பே கிராமத்தை சேர்ந்த விவசாயி தேவராஜ் என்பவர் தனது வீட்டின் அருகேயுள்ள தொழுவத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று கிராமத்திற்குள் நுழைந்தது. இந்த சிறுத்தை தேவராஜ் வீட்டின் தொழுவத்திற்குள் புகுந்து அங்கிருந்த ஆடு ஒன்றை அடித்து கொன்றது.
பின்னர் பாதி உடலை தின்றிவிட்டு வனப்பகுதியில் ஓடிவிட்டது. இந்நிலையில் நேற்று காலை தேவராஜ் எழுந்து வந்து பார்த்தபோது, தொழுவத்தில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்று செத்து கிடந்தது. அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தார்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது தேவராஜ் மற்றும் கிராம மக்கள் வனத்துறையினரிடம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று முறையிட்டனர். மேலும் சிறுத்தை நடமாட்டத்தை தடுக்கவேண்டும் கூண்டு வைத்து அதை பிடிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் அந்த சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.