வீட்டின் முன்பு கட்டப்பட்ட நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை
உத்தர கன்னடாவில் வீட்டின் முன்பு கட்டப்பட்ட நாயை வேட்டையாட முயற்சித்த சிறுத்தை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
கார்வார்:-
மைசூரு மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி இளம்பெண் உயிரிழந்து உள்ளார். பெங்களூரு நகருக்குள் 4 சிறுத்தைகள் உலா வந்து மக்களின் நிம்மதியை கெடுத்து உள்ளன. இந்த நிலையில் உத்தர கன்னடா மாவட்டம் கார்வாரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது தெரியவந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
உத்தர கன்னடா மாவட்டம் ஒன்னாவர் தாலுகா கோலிபைலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெக்டே. விவசாயி. இவர் ஒரு நாயை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹெக்டே தனது வீட்டின் முன்பு நாயை கட்டி போட்டு இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை ஹெக்டேயின் வீட்டை நோக்கி வந்தது. பின்னர் வீட்டின் முன்பு கட்டப்பட்டு இருந்த நாயை, சிறுத்தை வேட்டையாட முயன்றது.
அப்போது சுதாரித்து கொண்ட நாய், சிறுத்தையுடன் சண்டை போட்டது. மேலும் சிறுத்தையை பார்த்து குரைத்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஹெக்டே திடீரென மின்விளக்கை போட்டார். இதனால் சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த காட்சிகள் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. சிறுத்தை நடமாட்டத்தால் கோலிபைலு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். சிறுத்தையை, கூண்டு வைத்து பிடிக்கவும் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.