கேரள சிறையில் இருந்து தப்பிய ஆயுள்தண்டனை கைதி பிடிபட்டார்
பலாத்காரம் செய்து மைனர் பெண்ணை கொன்ற வழக்கில் கேரள சிறையில் இருந்து தப்பி தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி பிடிபட்டார். அவர், 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
மங்களூரு;
சிறையில் இருந்து தப்பினார்
கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாட்டின்கரா பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(வயது 39). இவர், கடந்த 2012-ம் ஆண்டு வடபூர் பகுதியை சேர்ந்த ஒரு மைனர் பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார். இதையடுத்து அவரை, போலீசார் கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர், திருவனந்தபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் கடந்த 2013-ம் ஆண்டு ராஜேசுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் நாளடைவில் அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. மேலும் அவர், திருவனந்தபுரம் மத்திய சிறைச்சாலையில் இருந்து நெட்டுக்காடாரி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23-ந்தேதி சிறையில் இருந்து ராஜேஷ் தப்பி தலைமறைவானார். இதையறிந்த போலீசார், அவரை வலைவீசி தேடிவந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக போலீசாரின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து அவர் தலைமறைவாக இருந்தார்.
போலீசில் சிக்கினார்
இந்த நிலையில் கேரள சிறையில் இருந்து தப்பி தலைமறைவாக இருந்த ஆயுள்தண்டனை கைதி ராஜேஷ், உடுப்பி மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக கோட்டா போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோட்டா போலீசார், உடுப்பி பிரம்மவார் தாலுகாவின் நைலாடி பில்லாடி கிராம பஞ்சாயத்து எல்லையில் உள்ள கப்பினாஹித்லு பகுதியில் ஒரு வீட்டில் தலைமறைவாக இருந்த ராஜேசை கைது செய்தனர்.
இதுபற்றி கேரள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கேரள போலீசார் விரைந்து வந்து ராஜேசை தங்கள் வசம் எடுத்து குந்தாப்புரா கோர்ட்டில் ஆஜர்படுத்தி கேரளாவுக்கு அழைத்து சென்றனர்.
பலாத்காரம் செய்து மைனர் பெண்ணை கொன்ற வழக்கில் கேரள சிறையில் இருந்து தப்பி தலைமறைவான ஆயுள் தண்டனை கைதி கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு போலீசில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
மேற்கண்ட தகவலை உடுப்பி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அக்ஷய் மச்சீந்திரா தெரிவித்துள்ளார்.