பெங்களூருவில் திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது
பெங்களூருவில் திருட்டு வழக்கில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது.
பெங்களூரு:
பெங்களூரு வித்யாரண்யபுரா போலீசார், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் தமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த மணி என்பது தெரியவந்தது. மேலும் அவர் அவ்வப்போது பெங்களூருவுக்கு வந்து இரவு நேரங்களில் பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து திருடி வந்துள்ளார்.
திருட்டு சம்பவத்தை அரங்கேற்றி விட்டு மணி, மீண்டும் பஸ் மூலம் சொந்த ஊருக்கு சென்று, அங்கு நகைகளை விற்பனை செய்து வந்துள்ளார். அதில் கிடைக்கும் பணத்தில் அவர் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. இவர் மீது ஏராளமான திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் தமிழ்நாட்டிலும் மணி திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் கடந்த 30 ஆண்டுகளாக பெங்களூருவுக்கு வந்து திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மணியை கைது செய்தனர். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.