சாம்ராஜ்நகர் அருகே ராணுவ பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது; பெண் உள்பட 2 விமானிகள் உயிர் தப்பினர்
சாம்ராஜ்நகர் அருகே ராணுவ பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் பெண் உள்பட 2 விமானிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பெங்களூரு:
ராணுவ பயிற்சி விமானம்
பெங்களூருவில் எச்.ஏ.எல். விமான படை தளம் உள்ளது. இங்கு விமானப்படையில் சேரும் வீரர், வீராங்கனைகளுக்கு விமானங்களை இயக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் எச்.ஏ.எல் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சி விமானம் சாம்ராஜ்நகர் நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்த விமானத்தை விங் கமாண்டர் தேஜ்பால் (வயது 50) இயக்கினார். அவருடன் விமானத்தை இயக்கும் பயிற்சி பெற பூமிகா (28) என்பவரும் பயணித்தார். அந்த விமானம் சாம்ராஜ்நகர் அருகே போகபுராவை அடுத்த மூக்கஹள்ளி பகுதியில் பறந்து கொண்டிருந்தது.
தொழில்நுட்ப கோளாறு
அந்த சமயத்தில் திடீரென்று விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் விமானத்தை தரையிறக்க விங் கமாண்டர் தேஜ்பால் முயற்சி செய்துள்ளார். ஆனால் அது முடியவில்லை. அதற்குள் விமானத்தின் என்ஜின் பகுதியில் தீப்பிடித்துள்ளது. இதையடுத்து தேஜ்பாலும், பூமிகாவும் உயிர் தப்பிக்க அவசரகால பாராசூட் மூலம் விமானத்தில் இருந்து கீழே குதித்தனர்.
அவர்கள் வந்த விமானம் மூக்கஹள்ளியில் உள்ள விளைநிலத்தில் விழுந்து நொறுங்கி வெடித்து சிதறியது. விமானம் விழுந்த பயங்கர சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த மூக்கஹள்ளி கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் விமான பாகங்கள் சிதறி கிடந்த நிலையில் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாயினர். மேலும் அப்பகுதி மக்கள், உடனே சாம்ராஜ்நகர் புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு கூடுதல் கலெக்டர் கார்த்தியாயினி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உதேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.
2 பேர் மீட்பு
மேலும் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அவர்கள் ரசாயன நுரை மூலம் விழுந்து நொறுங்கிய விமான பாகங்கள் மீது பிடித்து எரிந்த தீயை அணைத்தனர். இதற்கிடையே விமானத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த தேஜ்பால், பூமிகா ஆகியோர் விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் காட்டுப்பகுதியில் விழுந்து கிடந்தனர். அவர்கள் பாராசூட் மூலம் பாதுகாப்புடன் விமானத்தில் இருந்து குதித்திருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
காயமடைந்த 2 பேரையும் போலீசார் மீட்டு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் சிகிச்சைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் பெங்களூரு கப்பன்பார்க் ரோட்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணைக்கு உத்தரவு
விபத்தில் சிக்கிய விமானம் கிரண் எம்.கே. 2 இலகு ரக பயிற்சி விமானம் ஆகும். இந்த விமான விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு இந்திய விமான படை அதிகாரிகள், தொழில்நுட்ப நிபுணர்கள் அடங்கிய குழுவினர் வந்து சம்பவ இடத்தில் சிதறி கிடந்த விமான பாகங்களை பார்வையிட்டனர். மேலும் விபத்தில் சிக்கிய விமானத்தின் கருப்பு பெட்டியையும் கைப்பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். மேலும் விபத்தில் உயிர் தப்பிய விங் கமாண்டர் தேஜ்பால், பயிற்சி விமானி பூமிகா ஆகியோரிடம் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
3-வது நாளில்...
கடந்த 30-ந்தேதி தான் கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹோனிகால் அருகே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராணுவ பயிற்சி விமானம் ஒன்று அவசரமாக விளைநிலத்தில் தரையிறக்கப்பட்டது. இதில் விமானத்தின் சக்கரங்கள் சேதமடைந்து அதிர்ஷ்டவசமாக அதன் பைலட் உள்பட 2 பேரும் உயிர் தப்பினர். இந்த சம்பவம் நடந்த 3-வது நாளான நேற்று மற்றொரு ராணுவ பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.