குடோனில் பதுக்கிய ரூ.32 லட்சம் உணவு பொருட்கள் தொகுப்பு பறிமுதல்
கோலாரில் குடோனில் பதுக்கிய ரூ.32 லட்சம் மதிப்பிலான உணவு பொருட்கள் தொகுப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோலார் தங்கவயல்:-
உணவு பொருட்கள் தொகுப்பு
கோலார் மாவட்டம் பல்லஹள்ளி கிராமத்தில் ஸ்ரீநாத் என்பவருக்கு சொந்தமான குடோனில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக உணவு பொருட்கள் தொகுப்பு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பொருட்கள் வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிகாரிகள் பல்லஹள்ளி கிராமத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த குடோனில், தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர் படம் அச்சிடப்பட்ட பைகளில் உணவு பொருட்கள் தொகுப்பு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.
ரூ.32 லட்சம் மதிப்பு
ஒரு பையில் 4 கிலோ அரிசி, ஒரு கிலோ வெல்லம், 900 கிராம் உளுந்து, 900 கிராம் கொண்டை கடலை, ஒரு கிலோ மைதா மாவு ஆகியவை இருந்தன. மொத்தம் 3,066 உணவு பொட்கள் தொகுப்புகள் இருந்தன. அவை அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 252 குவிண்டால் அரிசி, 95 குவிண்டால் வெல்லம், 151 குவிண்டால் மைதா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.32 லட்சம் ஆகும்.
சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு வழங்க அவை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ., ஸ்ரீநாத் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டப்படி எதிர்கொள்வேன்
இதுகுறித்து ரூபாகலா சசிதர் எம்.எல்.ஏ. கூறுகையில், தங்கவயலில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பண்டிகை கொண்டாட முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இதனால் உகாதி பண்டிகையையொட்டி தங்கவயலில் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்க குடோனில் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால், அவற்றை ஏழைகளுக்கு கொடுக்க விடாமல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதற்காக என் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. ஏழைகளின் நலனுக்காக உதவுவதை தடுத்து என் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்என்றார்