கொலையாளியை அடையாளம் காட்டி கொடுத்த போலீஸ் மோப்பநாய்


கொலையாளியை அடையாளம் காட்டி கொடுத்த போலீஸ் மோப்பநாய்
x

முல்பாகல் அருகே கொலை நடந்த 24 மணி நேரத்திற்குள் கொலையாளியை அடையாளம் காண்பித்து கொடுத்த போலீஸ் மோப்பநாயிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கோலார்:-

கொலை

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா நந்தகலி போலீஸ் எல்லைக்குட்பட்ட பீவஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். நேற்று முன்தினம் இவர் வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நந்தகலி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் தடய அறிவியல் நிபுணர்கள், மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. வழக்கம்போல் தடய அறிவியல் நிபுணர்கள் கைரேகைகளை கைப்பற்றினர். பின்னர் மோப்பநாய் உதவியுடன் கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். அதன்படி மோப்பநாய் ரக்ஷா, கொலையாளி சென்ற இடத்தை மோப்பம் பிடித்தப்படி பின்தொடர்ந்து சென்றது.

அடையாளம் காட்டிய மோப்பநாய்

இந்தநிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரம் சென்றதும் நாய் நின்றது. இதையடுத்து போலீசார் அந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த மரத்தடியில் வாலிபர் ஒருவர் அமர்ந்து இருந்தார். அவரின் அருகே சென்று நாய் நின்றுவிட்டது. அந்த இடத்தில் இருந்து நாய் நகரவில்லை. இதையடுத்து அந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்தான் சுரேஷை கொலை செய்தவர் என்பது தெரியவந்தது. முன்விரோதத்தில் இந்த கொலை நடந்ததாக தெரிந்தது.

இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார், கூடுதல் விசாரணை நடத்துவதற்காக அழைத்து சென்றனர். இதற்கிடையில் கொலை நடந்த 24 மணி நேரத்தில் மோப்பநாய் ரக்ஷா கொலையாளியை அடையாளம் கண்டுபிடித்து கொடுத்தற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

பாராட்டுகள்

இதுகுறித்து கோலாா் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு நாராயணா கூறுகையில், கொலை நடந்த இடத்திற்கு மோப்பநாய் ரக்ஷாவை வரவழைத்தோம். அந்த மோப்பநாய் கொலையாளியை சரியாக அடையாளம் காண்பித்துவிட்டது. இந்த மோப்பநாயிற்கு கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி அளித்து வருகிறோம். இதுவரை எந்த மோப்பநாயும் கொலையாளியை அடையாளம் காண்பித்ததாக நான் பார்த்தது இல்லை. சிறிது தூரம் செல்லும் பின்னர் நின்றுவிடும்.

ஆனால் இந்த மோப்பநாய் ரக்ஷா 1½ கிலோ மீட்டர் தூரம் சென்று, கொலையாளியை அடையாளம் காண்பித்துள்ளது பாராட்டிற்குரியது. இதுபோலீஸ் துறைக்கு கிடைத்த பெருமை. இதேபோல பிற மோப்பநாய்களுக்கும் பயிற்சி அளிக்கவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட நந்தகலி போலீசாருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்


Next Story