இன்ஸ்பெக்டரை கண்டித்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம்
18 பேர் மீது பொய் வழக்கு பதிந்ததாக கூறப்படும் போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து சர்ஜாப்புரா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக கர்நாடக அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஆனேக்கல்:
போலீஸ் இன்ஸ்பெக்டர்
பெங்களூரு புறநகர் மாவட்டம் சர்ஜாப்புரா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மஞ்சுநாத். இவர் தனது போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்கவும், போராட்டம் நடத்த அனுமதி பெறவும் மற்றும் பிற விஷயங்களுக்காகவும் வருபவர்களை தரக்குறைவாக நடத்துவதாக புகார்கள் எழுந்தன. மேலும் அவர்களை கீழ்த்தரமாக நடத்துவதாகவும், அவர்களிடம் இருந்து சரிவர புகார்களை பெற்று விசாரிப்பதில்லை என்றும், எதிர்தரப்பினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் இதை கண்டித்து கர்நாடக அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் வருகிற 4-ந் தேதி சர்ஜாப்புரா போலீஸ் நிலையம் முன்பு மாபெரும் அளவில் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அந்த கூட்டமைப்பினர் நேற்று ஆனேக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:-
பொய் வழக்கு
போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலித் மக்களை தரக்குறைவாக நடத்தி வருகிறார். ஒரு அரசு அதிகாரியாக இருந்து கொண்டு அவர் இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல. புகார் கொடுக்க வருபவர்களையும், தலித் மக்களையும் சரியான முறையில் நடத்த வேண்டும் என்று அரசும், போலீஸ் உயர் அதிகாரிகளும் அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதை போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மீறி வருகிறார். மேலும் பல்வேறு விஷயங்களுக்காக போராடி வரும் தலைவர்கள் 18 பேர் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்.
அந்த வழக்குகள் குறித்த விவரங்களை கேட்டாலும் அதை தெரிவிக்க மறுக்கிறார். அந்த வழக்குகளை கையில் வைத்துக் கொண்டு போராட்டக்காரர்களை அவர் மிரட்டி வருகிறார். இதை கண்டித்து வருகிற 4-ந் தேதி சர்ஜாப்புரா போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்தில் ஆனேக்கல், ஒசக்கோட்டை, மாலூர், பொம்மனஹள்ளி, ஜிகனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.