ரெயில் விபத்தில் சிக்கிய கன்னடர்களை பத்திரமாக மீட்க மந்திரி தலைமையில் தனிக்குழு ஒடிசா பயணம்


ரெயில் விபத்தில் சிக்கிய கன்னடர்களை பத்திரமாக மீட்க மந்திரி தலைமையில் தனிக்குழு ஒடிசா பயணம்
x

ரெயில் விபத்தில் சிக்கிய கன்னடர்களை மீட்க முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவின் பேரில் நேற்று மந்திரி சந்தோஷ் லாட் தலைமையில் தனிக்குழு ஒடிசா சென்றுள்ளது.

பெங்களூரு:

110 பேர் உயிர் தப்பினர்

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் பெங்களூருவில் இருந்து ஹவுரா சென்ற அதிவிரைவு ரெயிலும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.

அதே நேரத்தில் இந்த ரெயில் விபத்தில் கர்நாடகதக்தை சேர்ந்த 110-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்து இருந்தனர். ஒடிசாவில் சிக்கியுள்ள கன்னடர்களுக்கு உதவும் வகையில் கர்நாடக அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து பற்றி தலைமை செயலாளர் வந்திதா வர்மாவிடம் முதல்-மந்திரி சித்தராமையா தகவல்கள் மற்றும் விவரங்கள் கேட்டு அறிந்து கொண்டார்.

சந்தோஷ் லாட்டுக்கு பொறுப்பு

மேலும் ஒடிசாவில் சிக்கியுள்ள கன்னடர்களை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படியும் அவர், தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டு இருந்தார். இந்த நிலையில், ஒடிசாவில் சிக்கியுள்ள கன்னடர்களை பத்திரமாக மீட்டு வரும் பொறுப்பை கர்நாடக தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் லாட்டிடம், முதல்-மந்திரி சித்தராமையா ஒப்படைத்துள்ளார்.

இதையடுத்து, கன்னடர்களை மீட்க மந்திரி சந்தோஷ் லாட் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அதிகாரிகளான மனோஜ் ராஜன், சுனில் மனோ கவாஸ்கர், சித்தனா கவுடா, அனில்குமார் தட்கல் ஆகிய 4 பேர் அந்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

தனி விமானத்தில் பயணம்

இந்த நிலையில், ஒடிசாவில் சிக்கி உள்ள கன்னடர்களை மீட்பதற்காக மந்திரி சந்தோஷ் லாட் தலைமையிலான தனிக்குழுவினர் நேற்று மதியம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் ஒடிசா மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர். நேற்று மாலையில் அந்த குழுவினர் ஒடிசா சென்றடைந்தனர்.

அதைத்தொடர்ந்து, ஒடிசாவில் ரெயில் விபத்து நடந்த பகுதிக்கு அந்த குழுவினர் சென்றனர். மேலும் அவர்களை பத்திரமாக பெங்களூருவுக்கு அழைத்து வரும் பணிகளில் மந்திரி சந்தோஷ் லாட் உள்ளிட்டோர் ஈடுபட்டு இருந்தார்கள்.


Next Story