தன்னை பார்த்து குரைத்த தெருநாயை துப்பாக்கியால் சுட்டு கொன்ற விவசாயி
தன்னை பார்த்து குரைத்த தெருநாயை துப்பாக்கியால் விவசாயி சுட்டு கொன்றார்.
பெங்களூரு: பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா மாதகொண்டனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. விவசாயியான இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு தெருநாய், கிருஷ்ணப்பாவை பார்த்ததும் ஆக்ரோஷமாக குரைத்தது. மேலும் அவரைப் பார்த்து சீறிக் கொண்டே இருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த கிருஷ்ணப்பா, தனது வீட்டில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தெருநாயை நோக்கி சுட்டார்.
இதில் குண்டு பாய்ந்து அந்த தெருநாய் சம்பவ இடத்திலேயே செத்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஹரீஷ் என்பவர் இதுபற்றி கிருஷ்ணப்பாவிடம் கேட்டார். அப்போது அவர் அந்த தெருநாய், என் மகனை கடித்துவிட்டது. அதனால்தான் அதை கொன்றேன். இதுபற்றி வேண்டுமானால் போலீசில் புகார் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார். அதன்பேரில் இதுபற்றி தொட்டபள்ளாப்புரா போலீசில் வனவிலங்கு ஆர்வலர்கள் சார்பில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.